தூக்குமேடைக் குறிப்பு - ஜீலியஸ் பூசிக் ( சித்ரவதையைக் கொண்டாடும் மனிதன்)

நான் சமீபத்தில் வாசித்த ஒரு நூல் செக்கோஸ்லோவோகியா நாட்டு பத்திரிக்கையாசிரியரும் போராளியுமான ஜீலியஸ் பூசிக் எழுதிய தூக்குமேடைக் குறிப்பு ( Notes From The Gallows ).


 செக்கோஸ்லோவோக்கிய நாட்டின் கடந்தகால அரசியலை  ஒரு பத்திரிக்கையாளரின் பார்வையில் சொல்லப்படுதலின் மூலம் பாசிசத்திற்கெதிரானதொரு உரையாடலைத் தொடங்கி வைக்கிறார். ஹிட்லரின் ஜெர்மானிய மேலாதிக்கத்துக்கு இரையாகும் நாடுகளில் செக்கோஸ்லோவோக்கியவும் ஒன்று. கம்யூனிஸ்ட்கள் அதற்கெதிரானதொரு நிலைப்பாட்டையும் கொள்கைப்பற்றும் உடையவர்களாக இருக்கின்றனர். இரகசிய குழுக்களினூடாக புரட்சிக்கான திட்டத்தை விடுக்கின்றனர். நாவலின் தொடக்கத்தில் பூசிக் கைது செய்யப்படுகிறார். பத்திரிக்கையின் மூலம் புரட்சிக்கர கருத்துக்களை மக்களிடையே துண்டுப்பிரசுரங்கள் மூலமும் இடதுசாரி செய்தித்தாளின் அரசியல் கட்டுரைகளின் மூலமும் வெளிப்படுத்தியமைக்காகவும் இதன்மூலம் ஆட்சேர்ப்பு நடவடிக்கைகள் வலுவடைந்ததாலும் பாசிச அடியாட்கள் பூசிக்கை கைது செய்கின்றனர். செக் போராளிகளின் வலியை எழுத்தின் வழி உணர்த்துகிறது  இந்நெடுங்கதை. இரத்த வாடை, சித்ரவதை தாங்காமல் காட்டிக் கொடுக்கும் சில அற்ப மனிதர்கள்  இருப்பினும் நல்மனம் படைத்த சக தோழர்கள் மற்றும் செக் காவலர்கள் போன்ற மனிதர்கள் இல்லையேல் இப்படியொரு மகத்தான படைப்பு சாத்தியமில்லை. கோழைத்தனம் , துரோகம் போன்றவை போராளிகளைக் காட்டிக் கொடுத்தாலும் அவர்களின் வீரியம் நிறைந்ததொரு எதிர்ப்புணர்வு வரலாற்றில் என்றும் நினைவுக்கூறப்படும். உலகில் அநீதிக்கெதிரான குரல் ஒலிக்கும் வரை ஜீலியஸ் பூசிக் போற்றப்படுவார் அவரது சித்ரவதையைக் கொண்டாடும் பண்பியல்பு பல வடிவங்களில் போராளிகளிடையே தொடர்ந்து கொண்டுதான் இருக்கும்.
                            -கனிஷ்கர்

கருத்துகள்

பிரபலமான இடுகைகள்