டோப்பு

ரேஸ்கோர்ஸ் ஸ்டோன்பெஞ்சில் அமர்ந்து கொண்டு வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தான் பழனி.  பழனியின் தந்தைக்கு திருமணம் ஆகி கிட்டத்தட்ட நான்கு ஆண்டுகளுக்கு மேலாக குழந்தைகள் இல்லை. பழனிமலை முருகனுக்கு வேண்டி பாதயாத்திரை சென்றார் அவன் அப்பா. அடுத்த ஆறுமாதத்தில் பழனி பாலதண்டாயுதபாணியே தனக்கு மகனாக பிறந்திருக்கிறான் என்று பழனிச்சாமி என்ற பெயர் சூட்டினார். ஐம்பது வயதைக் கடந்தும் கூட ஒவ்வொரு வருடமும் பாதயாத்திரை சென்றுகொண்டிருக்கிறார். மதிய வெயிலின் வெக்கை பழனியை வாட்டி வதைத்துக்கொண்டிருந்தது. வெயிலை எண்ணி மனதிற்குள்ளாகவே புலம்பிக்கொண்டிருந்தான். கிட்டத்தட்ட இரண்டு மாதங்களுக்கு மேல் கல்லூரி செல்லவில்லை. . அவ்வப்போது பழனியின் போன் அடிக்கும், எடுத்து பேசுவான். பிறகு ரேஸ்கோர்ஸ்க்கு பின்புறம் வனம் போன்று தோற்றமளிக்கும் பகுதிக்கு வரச்சொல்லி அங்கு இவர்களின் வியாபாரம் நடைபெறுகிறது. தினமும் காலையில் பழனியின் அம்மா காலை நான்கு மணிக்கே எழுந்து சமைத்து இவனை கல்லூரிக்கு செல்ல தயார்படுத்துகிறார்கள். அவன் தந்தை தனது டி வி எஸ் 50 ல்ரயில் நிலையம் வரை வந்து விட்டு செல்கிறார். இவனும் இரயில் ஏறி வந்து படித்துவருகிறான் என்பதுபோல் தான் எல்லோருக்கும் தோன்றும். ஆனால் இவன் போதைப்பொருள் விநியோகம் செய்பவனாக மாறிவிட்டான். ஆரம்பத்தில் கிராம் கணக்கில் தொடங்கிய வியாபாரம் பழனியின்   அதீத ஈடுபாடு காரணமாக இன்று கிலோ கணக்கில் விற்பனை செய்யும் அளவிற்கு தொழிலில் வளர்ந்திருக்கிறான். அவன் கல்லூரியில் சேர்ந்ததே இதற்காகத்தான், அவன் பள்ளியில் படிக்கும்போதே விற்பனை செய்யத் தொடங்கிவிட்டதால் தொழில் நுணுக்கங்களை மிக எளிதாகக் கற்றுக்கொண்டான். மொத்த வியாபாரியிடம் சரக்கை வாங்கி கொடுத்துவிடுவார்கள். பொட்டலம் போடுவது தான் பழனிக்கு அப்போது கொடுக்கப்பட்ட வேலை. 50கிராம்,100 கிராம் என்று வெவ்வேறு அளவுள்ள பொட்டலங்களைத் தயார் செய்வான் பழனி. ஒரு முறை இவ்வாறு பொட்டலம் போடும்போது போலீஸ் வந்துவிட்டதால் ஓட்டம் எடுத்தான். 2 கிலோமீட்டருக்கு மேல் ஓடியிருப்பான். அவன் முதலாளி வந்து "டேய் நில்லுடா அவரும் நம்மாளுதான்" என்று கூறியும் அவனுக்கு பயம் குறையவில்லை. ஒவ்வொரு மாதமும் போலீசுக்கு இருபதாயிரத்துக்கும் மேல் மாமூல் செல்கிறது. அதனால் பிரச்சினை இல்லாமல் சென்றுகொண்டிருந்தது. போலீசை பகைத்துக்கொண்டு தொழில் நடத்த முடியுமா?. பழனியின் ஊரில் ஒரு டாஸ்மாக் கடை உள்ளது. அதன் அருகில் சிறிய பெட்டிக்கடையில் கஞ்சா வியாபாரம் நடந்திருக்கிறது. பல மாதங்களுக்கு பிறகு போலீசுக்கு விஷயம் தெரியவந்திருக்கிறது. முறுக்கு, மிக்சர், கடலைமிட்டாய், சிகரெட், புகையிலை போன்றவற்றை விற்பதற்கு  லஞ்சம் போகிறது. ஆனால் கஞ்சா விற்பது தெரியாத நிலையில் டாஸ்மாக் சூப்பர்வைசர் சொல்லிவிடுவான். கஞ்சா விற்பனை அமோகமாக நடந்து கொண்டிருப்பது அவனுக்குள் பொறாமை ஏற்பட செய்திருக்கிறது. டாஸ்மாக் நிர்வாகத்திற்கு ஏற்பட்டுக்கொண்டிருந்த நஷ்டத்தை அவனால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை. விஷயத்தை சொல்லிவிட்டான். அடுத்த முறை நேரடியாக விஷயத்தை சொல்லாமல் சூசகமாக பேசி மாமூல் வாங்கி சென்றான் போலீஸ்காரன். பெட்டிக்கடைக்காரனுக்கு நிறைய பேர் மீது சந்தேகம் ஏற்பட்டது. ஆனால் வெளியில் காட்டிக்கொள்ளாமல் வியாபாரத்தை நடத்தி வந்தான். முன்னர் உள்ளூர்காரர்களுக்கும், அவர்கள் கூட்டிவரும் நபர்களுக்கு மட்டுமே விற்றுவந்தவன் தற்போது யார் வந்து கேட்டாலும் கொடுக்கிறான். இதனாலேயே வழக்கத்தைவிட அதிகமாக சரக்கு வாங்கி வந்தான். அப்படி ஒருநாள் கஞ்சா வாங்க சென்றவன் தான் பழனி. அப்போது பழனி பதினொன்றாம் வகுப்பு படித்து வந்தான். ஏற்கனவே பீடி, சிகரெட் பிடிக்கும் பழக்கம் அவனிடம் இருந்தது. தனக்கு மூத்த அண்ணன்களோடு ஒருநாள் கஞ்சா அடிக்கச் சென்றான். சூரிய அஸ்தமன நேரம் . உள்ளூர் மளிகைக் கடைக்குப் போய் தீப்பெட்டி, பீடி ஒரு கட்டு, 10 ரூபாய்க்கு மிட்டாய் வாங்கிக் கொண்டு காட்டை நோக்கி நடக்க ஆரம்பித்தார்கள். அவர்கள் போக வேண்டிய இடத்தை அடையும் போது நன்றாக இருட்டியிருந்தது. பீடியை பிரித்து சிறிய பொட்டலம் ஒன்றில் இருந்த கஞ்சா இலைகளை நுணுக்கமாக உள்ளிட்டு மூடினார்கள். ஆளுக்கு ஒரு முறை புகைத்திருப்பார்கள். பழனிக்கு இதுதான் முதல்முறை. அது அவனுக்குள் வசீகர தன்மையை ஏற்படுத்திவிட்டது. மறுபடியும் இதேபோல்  செய்திருப்பார்கள். பழனியின் அப்பா வீட்டுக்கு வரும் நேரம் ஆனதால் விரைவாக அங்கிருந்து கிளம்பினான். தனக்குள்ளாகவே பேசிக்கொண்டே

நடந்தான். மற்ற மூவரும் உடன் வரவில்லை. போதை அவனுக்குள் உற்சாகத்தை ஏற்படுத்தியது. வீட்டிற்கு சென்றுகொண்டிருக்கும்போது மழை பெய்ய ஆரம்பித்தது. வேகமாக ஓடினான். வாடை தெரியாமல் இருக்க வேண்டும் என்பதற்காக இரு முறை பல் துலக்கினான். போதும் என்ற அளவிற்கு மிட்டாய்கள் சாப்பிட்டான். அப்போது அவன் அப்பா அழைத்து "எங்கடா இருக்க இங்க நல்ல மழை, கம்பெனியிலிருந்து வர்ற வழியிலே நனைஞ்சுட்டோம்" வெளிய எங்கேயும் போகாத" என்று கூறினார். நல்ல மழை பெய்து ஓய்ந்தது. சற்று ஆசுவாசமடைந்தான். வீட்டில் சாப்பாடு இருந்தது. நன்றாக சாப்பிட்டுவிட்டு உறங்கினான். பொழுது விடிந்தது. எழுந்து பள்ளிக்கு செல்ல தயாரானான் பழனி. கிளம்பும் போது வீட்டில் சேர்த்து வைத்த மொத்த பணத்தையும் எடுத்துக்கொண்டான் 250 ரூபாய் இருந்தது.  இன்னைக்கு மறுபடியும் அடிச்சுப் பாப்போம் என்று தனக்குள்ளாகவே கூறிக்கொண்டான். அன்று முழுவதும் தன் நெருங்கிய நண்பர்களிடத்தில் இது குறித்தே பேச்சு. மச்சி நேத்து நான் டோப்பு அடிச்சண்டா. வேற லெவல் Feel மச்சா. இன்னைக்கு மறுபடியும் அடிக்கலாம்னு இருக்கான். அதற்குள் மற்றொருவன் நானும் வரட்டா? என்றான். டேய் ங்கோத்தா அது என்ன சின்ன விஷயமா போலீஸ் கிட்ட மாட்டுனா மாட்டு அடிதான். இப்டிதான் என் Friend ஏரியா கிரவுண்ட் பின்னாடி  இப்டி load பண்ணிட்டு இருக்கும் போது போலீஸ் ரவுண்ட்ஸ் வந்து அடி பிரிச்சுட்டாங்க.

டேய் மச்சி டேஞ்சர் டா வேணா சொன்னா கேளு வெடப்பு ஆகபோது.

அப்போது வகுப்பறைக்குள் உதவி தலைமையாசிரியர் வந்தார். இன்று இயற்பியல் சிறப்பு வகுப்பு இருப்பதாகக் கூறி விட்டு சென்றார். ஆனால் எந்த ஆசிரியரும் வராததால் மாணவர்களின் வெற்றுப் பேச்சுக்களால் நிறைந்திருந்தது வகுப்பறை.

பழனி நா முன்னாடி போய்  வாங்கிட்டு வந்து உங்க வீட்டுக்கு வந்து கூப்புட்டுக்கிறன் என்று கூறிவிட்டு அங்கிருந்து புறப்பட்டான்.

ஓல்டு பில்டிங் நுழைவாயிலில் உதவி தலைமையாசிரியர் நின்றுக் கொண்டிருந்ததால் அப்படியே திரும்பி வந்து விட்டான். ஏற்கனவே பலமுறை சிறப்பு வகுப்பின்போது இது போன்று தப்பிக்க முயற்சித்து மாட்டிக்கொண்டிருக்கிறான் என்பதால் மீண்டும் வகுப்பறைக்கே வந்து விடுகிறான்.

பெஞ்சில் அமர்ந்து கொண்டு இரும்பு ஸ்கேலைக் கொண்டு பாப் மார்லி என்ற பெயரை டெஸ்கில் பொறிக்கிறான். பக்கத்தில் கஞ்சா இலையையும் வரைகிறார். மிகக் கச்சிதமாக அவற்றை வரைந்து முடிவதற்கும் பள்ளியில் பெல் அடிப்பதற்கும் நேரம் சரியாக இருந்தது.

வீட்டில் கொடுத்த காசு தீர்ந்துவிட்டதால் அன்று அவன் ஊருக்குச் செல்லும் பேருந்தில் செல்ல முடியாத நிலையில் 4C என்ற எண் கொண்ட பேருந்தைத் தான் பிடிக்க வேண்டும் என்பதாக பள்ளியில் இருந்தே மெதுவாக ஓடவாரம்பித்தான். வியர்வையோடு பேருந்து நிறுத்தத்தில் உள்ள பெட்டிக்காரரிடம் வந்து கேட்ட போது இரண்டு நிமிடங்கள் முன்னதாக தான் பேருந்து சென்றதாகக் கூறினார். அப்படியே ஒரு பத்து நிமிடங்கள் வீட்டை நோக்கி நடந்திருப்பான். தண்ணீர் தாகமும் பசியும் வாட்டின. பிறகு மீண்டும் திரும்பி ஐயப்பன் கோயிலில் கிடைத்த பிரசாதத்தைச் சாப்பிட்ட பின்னரே சற்று தெம்பு கூடியது. பிறகு தனது சிம் இல்லாத மொபைலில் சினிமா பாடல்களை கேட்டுக்கொண்டே நடந்தான்.  மூன்று கிலோ மீட்டர் நடந்திருப்பான். அதற்கு மேல் நடக்க முடியாது என்பதுபோல் லிஃப்ட் கேட்டுச் சென்று விடலாம் என்று முடிவுச் செய்து பத்து இருச்சக்கரக்காரர்களிடம் கேட்டிருப்பான்.

கிட்டத்தட்ட இருட்டத்தொடங்கியிருந்ததால் சற்று வெப்பம் குறைந்து ஆசுவாசமானதொரு சூழல் நிலவியது.

இறுதியாக ஒருவர் லிஃப்ட் கொடுக்க ஏறிக் கொண்டான்.

தான் போக வேண்டிய இடத்தைக் கூற அவர் அந்த வழியில் உள்ள ஒரு மதுபானக் கடைக்குச் செல்வதாகக் கூறினார்.

அங்கு இறங்கிக் கொள்கிறேன் என்று வண்டிக்காரரிடம் கூறினான்.

வழியில் தென்பட்ட நண்பர்களுக்கு கையசைத்தவாறே சென்றான்.

மதுக்கடைக்கு எதிர்ப்புறம் இவனை இறக்கி விட்டு டாஸ்மாக்கிற்குள் நுழைந்தார் வண்டிக்காரர்.

இவன் யூனிப்பார்முடன் இருந்ததால் வீட்டிற்குச் சென்றுவிட்டு வந்துகொள்ளலாம் என்று நடக்கவாரம்பித்தான். சற்று இருட்டியிருந்ததால் சற்று தூரம் என்றால் கூட சாலை வழியையே தேர்ந்தெடுத்தான். காட்டு வழியாக சென்றால் வெகுசீக்கிரம் வீடு சென்றுவிடலாம். இவ்வாறு வீட்டிற்கு நடந்து வரும் நாட்களில் காட்டு வழியாகத் தான் செல்வான். ஸ்கூலுக்கு கட் அடிக்கும் நாட்களில் கூட சரியாக பராமரிக்கப்படாமலும் பல ஆண்டுகளாக தூர்வாரப்படாமலும் இருக்கும் குட்டைக்குள் சிகரெட்டுகளை வாங்கிக் கொண்டு போய் அங்கேயே முழு நாளையும் செலவிடுவான். நடுத்தர மதிப்பெண் பெறும் மாணவன் என்பதால் பள்ளியிலும் பழனியின் வருகைப் பதிவு குறித்து ஆசிரியர்களும் அக்கறை செலுத்துவதில்லை. அது இவனுக்கு மிகுந்த வசதியாயிற்று. ஒரு சில நாள்கள் தன்னுடைய நண்பன் ஒருவன் கட்டிட வேலை செய்யும் விக்னேஷூடன் சென்றுவிடுவான். ஒருநாளைக்கு நானூறு ரூபாய் கூலி.

ஹலோ மச்சி இன்னைக்கு வேலை இருக்குமா? ஸ்கூலுக்கு போக மொடயா இருக்குதுடா.

இன்னைக்கு ஹிந்திக்காரனுங்க வந்துருக்காங்க, ஒருநாளைக்கு முந்நூறு ரூபா தா கேட்குறாங்கனுங்க. அதனால மேஸ்திரியும் அவனுங்கக்கிட்ட வேலைக்கு ஆளு கேட்டுட்டு இருக்காரு.

நான் வேணா மேஸ்திரிக்கிட்ட கேட்டுட்டு சொல்றேன். அவரு இஞ்சினியர் கிட்ட பேசிட்டிருக்கறாரு.

பத்து நிமிஷம் கழிச்சு நானே கூப்புடுறன் என்று கூறிவிட்டு விக்னேஷ் போனை கட் பண்ணினான்.

இன்னைக்கு எப்படியாவது வேலை கிடைச்சரணும் அப்ப தா இந்த வாரமாது சினிமாவுக்கு போக முடியும்.

பள்ளி, குட்டை, கட்டிட வேலை வேலைக்கப்பால் பழனி அதிகமாக திரிந்தது. நகரின் மையப்பகுதியில் இருக்கும் மல்டிப்பிளக்ஸ் தியேட்டரின் தெருக்களில் சினிமா செல்ல வேண்டும் என்றால் ஏதாவது ஒரு பொய் நண்பனுக்கு பிறந்தநாள்  ட்ரீட் வைப்பான் என்பது போல் ஒர் உருட்டு உருட்டி விட்டு வீட்டிலிருந்து கிளம்புவான்.

ஒரு முறை இப்படிதான் சினிமா தியேட்டருக்குள் வீட்டில் சமைத்த உணவை கொண்டு சென்றதால் அனுமதி மறுக்கப்படவே நொய்யல் ஆற்றங்கரையின் உள்ள குப்பைத்தொட்டியில் டிபனிலிருந்த முழுச் சாப்பாட்டையும் கொட்டிவிட்டான். நொய்யல் ஆறும் இன்று குப்பைக்கிடங்காகத் தான் மாறிக்கிடக்கிறது. ஒரு காலத்தில் வேளாண்மைக்கும் குடிநீர் ஆதாரமாகவும் திகழ்ந்த நொய்யல் நதி தற்போது ஒரு சில சமூக ஆர்வலர்களால் மட்டுமே பேசுபொருளாக முன்வைக்கப்படுகிறது. நவீனமயமாக்கல் சூழல் அனைவரது வாழ்விலும் ஏற்படுத்திய மாறுதலை நொய்யல் நதியின் மீதும் ஏற்படுத்தியிருக்கிறது.

நொய்யல் ஆறு பழனியின் வீட்டுக்கு சற்றுத் தொலைவில் தான் பயணித்துக்கொண்டிருக்கிறது. தன் ஊரிலுள்ள பெரியவர்கள் நொய்யல் ஆற்றைப் பற்றிக் கூறும் ஒவ்வொரு பழமை ததும்பும் தகவல்கள் கேட்டு வியப்புற்றிருக்கிறான்.

முன்னாடியல்லா ஒரே மண்ண கெடக்குன்டா

கரையில எல்லா ஒரே மணலா இருக்கும்

நாங்க ஆத்துப்பக்கம் போனாலே மண்ண தோண்டுனா போதும் அரை அடி ல தண்ணீ வரும் அவ்வளவு அருமையா இருக்கு.

அப்பல்லாம் டவுனுக்குள்ள துணி வாங்கிட்டு வந்து ஆத்தங்கரையில் சாயம் போட்டு காயவெப்பாங்க. ஆனா இன்னிக்கி சாயப்பட்டறை எல்லாம் வந்து ஆத்துக்குள்ள எல்லாம் முள்ளு மரம் மொழச்சு எல்லாம் மாறிருச்சு.

முன்னர் ஊரிலுள்ளோரனைவரும் குடிப்பதற்கு உகந்ததாகவும் வேளாண்மைக்காகவும் பயன்படுத்தி வந்த நீர் தற்பொழுது சகலவித மாசுபாடுகளையும் பெற்றுவிட்டது.

சிறிது நேரத்தில் பழனிக்கு  விக்னேஷ் போன் செய்து இன்று வேலை குறைவாகத் தான் இருப்பதாகவும் வேலை வரும் போது அழைப்பதாகவும் கூறி கட் பண்ணினான்.

என்ன செய்வது என்று யோசித்துக் கொண்டே மினிப் பேருந்தில் ரயில் நிலைய பேருந்து நிறுத்தத்திற்குச் சென்றான்.

அங்கிருந்து சிறிதும் யோசனையின்றி அன்று பள்ளிக்குச் சென்றுவிட்டான்.

வீட்டில் வந்து எப்போதும் போல டியூசன் செல்ல தயாரானான்.

டாஸ்மாக் கடை முன்பாக சென்றுக்கொண்டிருக்கும்போது அவனுக்குள் ஒரு நடுக்கமேற்பட்டது. சற்றுத் தொலைவில் வண்டியை நிறுத்தி விட்டு அவனுடைய ஸ்கூல் bag உடன் கஞ்சா விற்கும் அந்தப் பெட்டிக் கடைக்குச் சென்று

அண்ணே பொட்டலம்.

யாருப்பா நீ?

அண்ணே அன்னைக்கு வந்தேன்ல மறந்துட்டீங்களா?

எப்ப பா வந்த உன்ன பாத்ததில்லையே?

சின்ராசண்ணன் கூட வந்துருக்குறன் ணா நீங்க தா மறந்துட்டீங்க.

ஓ அவன் கூட வந்தயா. தெனம் பத்து பேரு இப்டி தா வந்து கேட்பாங்க?

எங்கிட்டுடிருந்தோ வந்திருப்பாங்க. உங்க கிட்ட ரெகுலரா வாங்கிட்டு இருக்கோம் அப்டிம்பாங்க.

இப்டி தான் ஒரு டைம் புதுசா வந்த ஏட்டையா பொருள் வாங்குற மாறி வந்து டெஸ்ட் பண்ணுனாரு.

நான் தரல

அப்புறம் இன்ஸ்பெக்டர் வந்து விஷயத்த சொன்னாரு.

வெளி ஆளுக்கு விக்க ஆரம்பிச்சா சரக்கு ரொம்ப தேவைப்படும்.

கமிஷன் நெயற கொடுக்கணும்.

சரக்கு கொண்டு வருவதற்கும் ரிஸ்க்.

மெயின் ரோட்டு வழியா செக் போஸ்டு இருக்கும்னு குறுக்கு வழியாத்தான் வரணும்.

அதனால தெரிஞ்சவங்க கிட்ட மட்டும் தான் விக்கிறது.

சரிப்பா நீ இந்த ஊர்ல எப்பேர்லந்து இருக்க?

அண்ணா சின்ன வயசுல இருந்தே இங்க தான்

சொந்த ஊர் மதுரை பக்கத்துல மேலூர்.

எனக்கு ரெண்டு வயசா இருக்கும் போது இங்க வந்துட்டோம்.

தம்பி நான் திண்டுக்கல் தான் யா

சரிண்ணே

எவ்வளவுக்கு வேணும்.?

அண்ணே எரநூறுவாய்க்கு குடுங்க

கஞ்சா பொட்டலத்தை அவனிடம் எடுத்து நீட்டுகிறார்‌ பெட்டிக்கடைக்காரர்.

அன்று பழனி டியூசன் செல்லாமல் நேராக நண்பன் மணி வீட்டுக்குச் சென்றான். அவனுடைய வீட்டின் அருகே உள்ள கோயில் வளாகத்தில் கஞ்சா புகைத்தனர்.

இரவு ஒன்பது மணி வரை அங்கேயே இருந்தான்.

அன்று இரவு வீட்டுக்கு சற்றுத் தாமதமாகவே சென்றான்.

 அனைவரும் தூங்கி விட்ட பின்னரே வீட்டுக்குச் சென்றான்.

அவன் அம்மா ஏன்டா இவ்வளவு நேரம். ?

அம்மா நாளைக்கு எக்ஸாம் அதான் கொஞ்சம் லேட்.

தூக்க கலக்கத்தில் சரி சாப்பிட்டுட்டு சமையல் ரூமை பூட்டிரு.என்று கூறினார்.

எரநூறுவாய்க்கு வாங்கி சரக்கு வாங்கி கொஞ்ச நேரம் கூட அடிக்க முடியலயே.

சரி எக்ஸாம் முடியட்டும் காசு சேத்து வச்சு  இன்னொரு டைம் அடிக்கலாம். என்று புலம்பிக்கொண்டே இரவு உணவை சாப்பிட்டான். கடும்பசி அவனை வாட்டியது. கோயில் பிரசாதம் சிறு பசியை மட்டுமே போக்கியது.

மறுநாள் வேதியியல் தேர்வில் மிகக் கடினமான வினாக்கள் கேட்கப்பட்டதால் பெயில் ஆகிவிடுவேன் என்று நண்பர்களிடம் புலம்பிக் கொண்டிருந்தான்..

டேய் மச்சான் மாசமாசம் நானூறுவா டியூசன் பீஸ் கட்டுறன்டா.

மச்சி என் பிரண்ட் ஒருத்தன் வருஷம் ஸ்கூலுக்கு ஒன்றரை லட்சம் பணம் கட்டி படிச்சான். கடைசில பாத்தா பப்ளிக் எக்ஸாம் ல பெயில் ஆயிட்டான்.அத யோசிச்சு பாரு.

இதெல்லாம் ஒரு விஷயமாக?

ரேங்க் கார்ட வீட்டுக்கு குடுத்தாதான் வெடப்பு.

நானே எங்கப்பன் கையெழுத்த போட்டுகிட வேண்டியதுதான்.

பேசமா ஆர்ட்ஸ் குரூப் எடுத்துருக்கலாம்.

ஜாலியா சுத்திட்டு இருந்துருக்கலாம்.

இப்படி மேட்ஸ் குரூப் எடுத்துட்டு எல்லாம் எங்கப்பன சொல்லனும்.

அவனால தா எல்லாம் .

இன்னிக்கி சாயங்காலம் நம்ம பசங்கலாம் பஸ் ஸ்டாண்டுக்கு சண்டைக்கு போறாங்களாமா நம்மலயும் வரச் சொல்றாங்க.

நம்ம கிளாஸ் ல நம்ம தா போகனும். இவனுங்க ல வரமாட்டாங்க.

டோமர்ஸ்.

டேய் அப்டி இல்லடா.

நம்ம பசங்கல பாத்தாலே அவனுங்க எல்லாம் பயப்படுவாங்க.

கூட வந்து நிக்கட்டும்.

நான் எல்லார்கிட்டயும் போய் பேசுறன்.

நெல்சன தவிர மத்தவங்ககிட்ட போய் பேசுறன்.

ஏன்னா அவன் சேவூர் போகனும்.

போன தடவை இப்டி தா சண்டைக்கு போய்ட்டு வந்து அவன் வீட்டுக்கு போறதுக்கே எட்டு மணி ஆயிருச்சு.

அவனுங்க வேற இரும்புக்கம்பியை வெச்சு கீறுனதுல நெல்சனுக்கு கையில அடிப்பட்டு ரத்தம் நிக்காம வந்துட்டே இருந்துச்சு.

அப்புறம் போய் மெடிக்கல்ல மருந்து வாங்கி போட்டுட்டுதா வீட்டுக்கு அனுப்பி வெச்சோம்.

அதுனால அவன் மட்டும் வேணாம்.

நம்ம பசங்க கிட்ட சொல்லுவோம். வரவங்க வரட்டும்.

நெல்சன் கணியாம்பூண்டி அருகில் தான் வாடகைக்கு வீடு எடுத்து வசித்து வந்தான்.

புது வீடு கட்டிக் கொண்டு சில மாதங்களுக்கு முன்னர் தான் சேவூர் சென்றான்.

போன முறை ரயில்வே கேட் சண்டையின் போதுதான் அந்த ஸ்கூல் பசங்க கையில் வெட்டி விட்டார்கள்.

நெல்சன் வலியைக் வெளிக்காட்டிக் கொள்ளவில்லை.

ஒரு பெண்ணை காதலிப்பதில் இருவருக்கும் இடையே ஏற்பட்ட தகராறு இரண்டுப் பள்ளிக் கூடங்களுக்கு இடையேயான பிரச்சினையாக உருமாற்றம் பெற்றது.

அடுத்தநாள் ரயில்வே கேட்டை தாண்டி அந்த பள்ளிக்கூடத்துக்கு அருகிலேயே சென்று அடித்து விட்டு வந்தார்கள்.

அந்த விஷயத்தை கிட்டத்தட்ட ஒரு வாரத்திற்கு மேல் சொல்லிக்கொண்டு பெருமைப்பட்டுக்கொண்டார்கள்.

இப்படியாக வன்முறையாட்டங்களால் பழனியின் பள்ளிப் பருவம் சென்றுகொண்டிருந்தது.

ஒருநாள் பஸ் ஸ்டாண்டில் வைத்து பழனியின் நண்பன் ஒருவனின் மண்டையை பக்கத்துப் பள்ளி பையன்கள் சண்டையில் பிளந்துவிட்டார்கள்.

அதற்கு பழித்தீர்த்தே ஆக வேண்டும் என்று மாலையில் கஞ்சா அடித்துவிட்டு பழனி தன் பங்கிற்கு நண்பர்களைத் திரட்டிக் கொண்டு சண்டைக்கு கிளம்பினான்.

மறுநாள் கணிதத் தேர்வு என்பதை மறந்துவிட்டான். ஏற்கனவே பர்ஸ்ட் யூனிட் எக்ஸாமில் தோல்வியடைந்திருந்ததால் தனியாக டியூசன் வேறு வைத்துக்கொண்டிருந்தான். பழனியின் காதலியின் வற்புறுத்தலின்பேரில்.

+2 வாவது பாஸ் பண்ணுடா. அப்பதான் எங்க வீட்ல பேச முடியும். ஏற்கனவே எனக்கு மாப்பிள்ளை பாத்துட்டுட்டு இருக்காங்க. ஒருத்தர் போனவாரம் கூட வந்தார். மேஸ்திரி வேலை பாக்குறாராமா. மாசம் நாப்பதாயிரம் வருமானம் வருதுன்னு சொன்னாங்க வீட்ல. நான் தான் ஸ்கூல் முடிச்சுகிறன். அப்புறம் எதுன்னாலும் பேசிகிலாம்ன்னுட்டன். அந்த வருடம் நடைபெற்ற +2 தேர்வில் பழனி நான்கு பாடங்களில் பெயில் ஆனான்.

       - கனிஷ்கர்


கருத்துகள்

பிரபலமான இடுகைகள்