மூன்று பெண்கள் துயருறும் கதை - தண்ணீர்

அசோகமித்திரன் படைப்புகள் மிகக் கடுமையான தருணங்களையும் மிக இலகுவாக கடந்துசெல்லக்கூடியது. அவருடைய கரைந்த நிழல்கள் நாவல் வாசிக்கையில் தான் அதைத் தெரிந்து கொள்ள முடிந்தது. நகர்ப்புற வாழ்வியல் சிக்கல்களையும் அன்றாட வாழ்வின் நெருக்கடிகளையும் அவருடைய சிறுகதைகளிலும் நாவல்களிலும் காணலாம். அதுபோலதான் இந்தத்
 "தண்ணீர்" நாவலிலும்.


கதை ஜமுனா, சாயா, டீச்சரம்மா ஆகிய கதாபாத்திரங்களின் பார்வையில் செல்கிறது. மூவருமே குடும்ப அமைப்பிலும் புற சமூகத்திலும் பல்வேறு பெரும் இன்னல்களை சந்திக்க நிர்ப்பந்திக்கப்பட்டிருப்பவர்கள்.
ஜமுனா சினிமா வாய்ப்புகளுக்காக தன் வாழ்க்கையை இழந்துத் தவிக்கும் பெண், மிலிட்டரி கணவனுக்காகக் காத்துக்கொண்டிருக்கும் சாயா, திருமணம் செய்து கொண்டதுமுதல் நோய்வாய்ப்பட்ட கணவனோடு வாழ்வை நகர்த்திக்கொண்டிருக்கும் டீச்சரம்மா.
இவர்கள் மூவருக்கும் இணைப்புப்பாலமாக இருக்கும் "தண்ணீர் பஞ்சம்"
தண்ணீருக்காக நகர்ப்புற மனிதர்கள் எவ்வாறு பெருந்துயருறுகிறார்கள் என்பதை மிக அழுத்தமாகக் கூறும் படைப்பு "தண்ணீர்"
பெண்களுக்கென்று இச்சமூகம் வைத்திருக்கும் சில சட்டத்திட்டங்களையும் கட்டமைப்புகளையும் உடைத்தெறிகிறது இந்நாவல்.
ஜமுனா வாழ்வின் மீதான நம்பிக்கையை இழந்து தற்கொலை செய்து கொள்ள முயற்சித்துப் பின்னர் தோல்வியுறும் கணத்தில் டீச்சரம்மாவுடன் நடத்தும் உரையாடல் ஒரு மாபெருஞ் சாதனை.
நகர்ப்புற வாழ்வியல் அபத்தங்களை புரிந்துக்கொள்ள மகத்தானதொரு படைப்பு இந்நாவல். உங்கள் வாசிப்பு தாகத்தை இந்நாவல் தீர்க்கும் என்பதில் மாற்றுக்கருத்தில்லை.

கருத்துகள்

பிரபலமான இடுகைகள்