பால்யகால சகி - அன்பெனப்படுதல்

மொழிபெயர்ப்பு நாவல்களை வாசிக்கும் போது இலகுவாக இருப்பது அவசியம். இல்லையெனில் அதன் உலகிற்குள் நுழைவது கடினம். பஷீரின் இந்நாவல் சிறப்புற மொழிப்பெயர்க்கப்பட்டிருக்கிறது. எழுத்தின் வேகம், கதை சொல்லும் விதம், உண்மைக்கு நெருங்கிய தன்மை என்று நாவல் என்னை கவர்ந்திழுத்தது. நான் இதுவரையிலும் ஒரே நாளில் படித்து முடித்த நாவலாக இந்நாவல் இருக்கிறது.நாவலில் பகடிகளுக்கு பஞ்சமே இல்லை, எந்தப் பக்கத்தையும் நம்மால் சிரிக்காமல் கடந்து செல்ல முடியாது. 



 தன் பால்யகால நினைவுகளை கூறும் ஒரு இளைஞரின் வாழ்க்கையே கதையின் கரு. மஜீத் என்ற சிறுவன் சுகறா என்ற தன் பக்கத்து வீட்டு சிறுமியிடம் நட்புக்கொள்கிறான். இஸ்லாமிய பின்னணி கொண்ட வாழ்வியலை நாவல் பதிவு செய்கிறது. எல்லா இடங்களிலும் தங்கள் அன்பினை ஒருவரோடொருவர் பரிமாறிக்கொள்கின்றனர். மஜீத் அந்த ஊரின் செல்வந்தரின் மகன், சுகறா கூலித்தொழிலாளியின் மகள் இந்த வேறுபாடுகளும் மற்ற புறக்காரணிகளும் அவர்களை எந்த விதத்திலும் பாதிப்பிற்குள்ளாக்குவதில்லை. மஜீத் உயர்நிலைக்கல்விப் பெற நகரத்திற்குச் சென்று வருவான். அச்சமயம் உடல்நலம் சரியில்லாமல் சுகறாவின் அப்பா இறந்து விடுவார். ஆனால் சுகறாவிற்கு பள்ளி சென்று படிக்க வேண்டும் என்று மனத்திற்குள் ஓர் விருப்பம். சூழ்நிலை காரணமாக பள்ளி செல்லவியலாது. மஜீத் வீட்டில் பேசிப்பார்ப்பான். ஆனால் வீட்டில் அவன் அப்பா மறுப்பு தெரிவிக்கவே, அவரிடம் பகைத்துக்கொள்வான். அப்பொழுது மஜீத் - சுகறா பதின் பருவத்தை எட்டியிருப்பார்கள். அவர்களுக்குள் ஒரு காதல் ஏற்படும். ஒரு கட்டத்தில் வீட்டில் சண்டையிட்டு விட்டு மஜீத் நாட்டின் பல்வேறு பகுதிகளில் அலைந்து திரிவான். மலைகள், சமுத்திரங்கள், வனங்கள், நதிகள் எனப் பல்வேறு நிலப்பரப்பினூடும் மனிதர்களோடும் தன் வாழ்க்கையை கழித்து கொண்டிருப்பான். பத்து ஆண்டுகள் கழித்து மீண்டும் வீட்டிற்கு வந்து பார்த்தால் எல்லாம் மாறியிருக்கும். சுகறா திருமணமாகி நிம்மதி இல்லாத வாழ்க்கை வாழ்ந்துகொண்டிருப்பாள். தன் பெற்றோர் சொத்துக்கள் அனைத்தையும் இழந்து நிர்க்கதியாகியிருப்பார்கள். இப்படிப்பட்ட ஒரு சூழலை மஜீத் நினைத்தும் பார்த்திருக்கமாட்டான். இதன் பின்னர் மஜீத் மனிதன் என்னென்ன இன்னல்களை எல்லாம் சந்திக்க வேண்டாம் என்று நினைப்பானோ அப்படியான எல்லா இன்னல்களையும் சந்திப்பான். குடும்பம், காதல், சமூகக் கட்டமைப்பு என எல்லாவற்றையும் கேள்விக்குட்படுத்துகிறது. இந்நாவல். மலையாள சினிமாக்கள் போலவே மலையாள இலக்கியங்களும் நம்மை ஆட்கொள்கின்றன என்பதில் மாற்றுக்கருத்து இருக்க முடியாது. சுருங்கக்கூறின் "பால்யகாலசகி" ஒரு மகத்தான குறுங்காவியம். 

                            - கனிஷ்கர்

கருத்துகள்

பிரபலமான இடுகைகள்