"வெக்கை" ஆறா வடு

பூமணியின் எழுத்து வெறும் கதைகளை மட்டும் கூறுவதில்லை. ஓர் நிலப்பரப்பின் வாழ்வியலை நமக்கு அளிக்கிறது. கதையை கதையாக மட்டுமே எழுதினால் அதனை "தட்டை எழுத்து" என்று கூறிவிடுவார்கள். புனைவுக்கு என்று ஒரு மொழி, கதை சொல்லும் பாணி, கதைக்களம் என்று பல்வேறு காரணிகள் உள்ளது. அவற்றை மிகைப்படுத்தாமல் கூறுவதிலேயே ஓர் எழுத்தாளனின் படைப்பு காலம் கடந்தும் பேசப்படுகிறது. வெக்கை நாவல் வெளியாகி நாற்பது வருடங்களை கடந்திருந்தாலும் இன்றும் விவாதிக்கப்படுகிறது. காரணம், அது ஓர் எதார்த்தவாத நாவல். இந்த நாவலைத் தழுவி இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில் வெளிவந்த திரைப்படம் அசுரன். நாவலின் கரு சிதையாமல்  திரைப்படம் எடுக்கப்பட்டிருக்கும். இயக்குநர் தன் திரைமொழிக்கேற்ப சில மாற்றங்களை செய்திருப்பார். பூமணியும் ஒரு நேர்காணலில் நாவல்கள் திரைப்படமாவது வரவேற்கப்பட வேண்டிய ஒன்று தான் என்று கூறியுருப்பார். மாமேதை லெனின் கூற்றுப்படி "இந்த நூற்றாண்டின் மிகப்பெரிய ஆயுதம் சினிமா". இந்த நாவல் பெருமளவு வாசிக்கப்பட்டதற்கு காரணமே இது சினிமாவாக எடுக்கப்பட்டதால்தான்.


தலித் நில உரிமையே நாவலின் மையக்கரு. நாவலின் தொடக்கத்தில் பரமசிவத்தின் மகன் செலம்பரம் வடக்கூரானை கொலை செய்து விடுவான். பழிவாங்கும் நோக்கில் செய்யப்பட்ட கொலையால் குடும்பமே பெரும் இன்னலுக்கு உள்ளாகும். போலீஸிடம் சிக்கினால் அடித்தே கொன்றுவிடுவார்கள் என்பதற்காக ஊரை விட்டு விலகி வனங்களுக்குள்ளும் மலைப் பகுதிகளிலும் அலைந்து திரிவார்கள். இறுதியாக கோர்ட்டில் ஆஜராக செல்வார்கள். சாதிய கட்டமைப்பு, ஆதிக்க சாதி மனநிலை, நில உரிமை என்று நாவல் பல்வேறு விவாதங்களை ஏற்படுத்தியிருக்கும். வடக்கூரானுக்கு பரமசிவம் நிலம் வைத்து வெள்ளாமை செய்வது பிடிக்கவில்லை. பலமுறை கேட்டும் நிலத்தை விற்க முன்வரவில்லை, இதனால் கோபமுற்ற வடக்கூரான் செலம்பரத்தின் அண்ணனை கொன்று விடுகிறான். மர்மமான முறையில் கொலை செய்யப்படுவதால் கொலையாளி குறித்து யாருக்கும் தெரியாது. தெரிந்தாலும் யாரும் எதுவும் சொல்லப்போவதில்லை. அரசாங்கம், சட்டம், போலீஸ் என சகல அதிகாரங்களும் வடக்கூரான் பக்கம். நாளடைவில் பரமசிவமும் செலம்பரத்தின் மாமாவும்  கொலையாளியை கண்டுபிடிக்கின்றனர். இதன் காரணமாகவே வடக்கூரான் கொலை செய்யப்படுகிறான். பஞ்சமி நிலங்கள் தலித்துகளிடம் இருந்தால் அவர்கள் பண்ணையாட்களாக வேறு ஒருவரின் நிலத்தில் உழைக்க வேண்டி இருந்திருக்காது. ஆங்கிலேயர்கள் தாழ்த்தப்பட்ட மக்கள் பொருளாதார முன்னேற்றத்தைக் கருத்தில் கொண்டு அவர்களுக்கு பஞ்சமி நிலங்கள் வழங்கினர். அவ்வாறு வழங்கப்பட்ட நிலத்தை விற்கவோ, குறிப்பிட்ட ஆண்டுகளுக்கு குத்தகைக்கு விடவோ உரிமை இல்லை. அவ்வாறிருக்கையில் ஆதிக்க சாதியினர் அந்நிலங்களை பல்வேறு வழிகளில் அபகரித்துக்கொண்டனர்.இதனால் நில உரிமை இழந்து பொருளாதார தேவைகளுக்காக தலித்துகள் வேறு ஒருவரின் நிலத்தில் பண்ணையாட்களாக பணிபுரிய நிர்ப்பந்திக்கப்பட்டனர். அப்படிப்பட்ட சூழலில் எதிர்ப்பு மனோபாவம் கொண்ட பரமசிவம் நிலத்தை பறிபோக விடாமல் பார்த்துக் கொள்கிறார். அதுவே பகைக்கு வழி வகுக்கிறது.


                   - கனிஷ்கர் 

கருத்துகள்

பிரபலமான இடுகைகள்