சஞ்சாரம் நாவல் ஓர் பார்வை
தமிழ் இலக்கிய சூழலில் நான் அறிந்த வரை நாதஸ்வர கலைஞர்களைப் பற்றிய பதிவுகள் காணக்கிடைக்காதது. அவர்களின் வாழ்வியல் அனுபவங்கள், ஏக்கங்கள், துயர் மற்றும் வரலாறு என்று கிட்டத்தட்ட நானூறு பக்கங்களுக்கு மேல் செல்கிறது சஞ்சாரம் நாவல்.
கரிசல் மனிதர்களின் வாய்மொழிக்கதை அவ்வவ்போது நாவலுக்கு வலுச்சேர்கிறது. கதையின் நாயகன் பக்கிரி பனங்குளம் என்ற கிராமத்திற்கு நாதஸ்வரம் வாசிக்க செல்கிறான். அங்கு ஊர்க்காரர்களுக்குள் சண்டை ஏற்படுகிறது, அச்சமயம் பக்கிரி சாதியை காரணம் காட்டி மிகவும் இழிவாக நடத்தப்படுகிறான். ஒரு கட்டத்திற்கு மேல் பொறுமையிழந்து ஊர்க்காரனை அடித்து விடுகிறான். அதைப் பார்த்த மற்ற ஊர்க்காரர்கள் பக்கிரியை அடித்து கட்டிவைத்து விடுகிறார்கள். அங்கிருந்து தப்பிச் செல்ல முயற்சிக்கிறான். ஆனால் ஊர் சிறுவர்களிடமும் அடி வாங்கியதே மிச்சம். இரவில் தப்பிச் செல்வதற்கான வாய்ப்பு கிடைக்கிறது. அவன் தப்பிப்பதில் நாவல் தொடங்குகிறது. ஒவ்வொரு அத்தியாயமும் வெவ்வேறு காலக்கட்டத்தின் கதைகளாக பரிணமிக்கின்றன. ரத்தினம் மற்றுமொரு முக்கிய கதாப்பாத்திரம். கதை முழுவதும் பக்கிரி உடன் பயணிக்கும் கதாப்பாத்திரம். இந்தியாவின் வடமாநிலங்களுக்கு ஏன் நாதஸ்வரம் செல்லவில்லை என்ற பகுதியில் நாதஸ்வர வித்துவான் லட்சையாவின் வரலாறு சொல்லப்படுகிறது.நாதஸ்வர வாசிப்பின் மூலம் ஒரு பேரரசனயே தன்வயப்படுத்திவிடுவார் லட்சையா.
நாட்டார் தெய்வங்கள், வாய்மொழி இலக்கியம், தென்தமிழக சாதிய வன்முறைகள், வறட்சி, நவீன மயமாக்கல், புலம்பெயர் விவசாயிகள் நிலை, கரிசல் கிராமங்களின் மனிதர்கள் என்று நாவல் பல்வேறு அடுக்குகளை தன்னகத்தே கொண்டிருக்கிறது.
தற்போது அழிவின் விளிம்பில் இருப்பது நாதஸ்வர கலைஞர்கள் மட்டுமல்ல நாதஸ்வர கலையும் தான் என்பதை பல்வேறு சம்பவங்கள் மூலம் விளக்கியிருப்பார் எஸ்.ரா. ஒரு எதார்த்தவாத நாவலாக இருப்பினும் தனது வார்த்தை ஜாலத்தால் நாவலின் வழி புனைவின் அத்தனை சாத்தியங்களையும் நிகழ்த்தியிருப்பார் எஸ்.ராமகிருஷ்ணன். ரூஷ்ய மேதை ஏங்கெலஸ் கூற்றுப்படி "எதார்த்தவாதம் என்பது நடந்தவற்றை கூறுவது அல்ல என்ன நடக்க வேண்டும் என்று நாம் விரும்புகிறோமோ அதை கட்டமைப்பது". அது இந்நாவலில் நிகழ்ந்திருக்கிறது. இறுதியாக பக்கிரி காவல்துறையினரால் கைது செய்யப்படுகிறான்.
- கனிஷ்கர்
கருத்துகள்
கருத்துரையிடுக