கேனான் 1500டி

டிஜிட்டல் கேமரா வாங்கிதருமாறு வீட்டில் சண்டையிட்டிருந்ததால் இன்று கம்பெனியிலிருந்து குமார் நகருக்கு நடந்தே செல்வது என்று முடிவெடுத்தேன்.  பேருந்து நிறுத்தத்திற்கு சற்று தூரம் போய்க்கொண்டிருக்கும் போது கோவை என்ற பெயர் பலகையோடு ஓர் பேருந்து சென்றது.அதை விட்டுவிட்டதால் அடுத்தப் பேருந்திற்கு சுமார் இருபது நிமிடங்கள் நிற்க வேண்டி இருந்தது.நிழற்குடை அற்ற பேருந்து நிறுத்தம் என்பதால் கடும் உஷ்ணம்.பேருந்தில் ஏறி உட்காருவதற்கு இடம் இருக்கிறது என்று தெரிந்தவுடன் தணிந்தது.காந்திபுரம் பஸ் ஸ்டாண்டிற்குள் நுழைந்தவுடன் ஒரு பெரும் திரளே அடுத்து பேருந்திற்காக காத்திருந்தனர்.தமிழக அரசே 50 சதவீதம் தான் பயணிக்க வேண்டும் கூறும் போது அங்கு இருந்த கூட்டத்தை பார்த்தவுடன் அது மும்மடங்காக இருப்பதை உணர்ந்தேன்.கிடைத்த சிறிய இடைவெளியை பயன்படுத்தி கீழே இறங்கியவுடன் டவுன் பஸ் ஸ்டாண்டிற்கு ஓட்டம் பிடித்தேன்.அங்கு எங்கள் கல்லூரி செல்லும் பேருந்து ஒன்று நிற்பதை பேருந்து நிலையம் உள்நுழையும் போது பார்த்து விட்டேன்.அதுதான் ஓட்டத்திற்கு காரணம்.மொத்தம் இரண்டு பேருந்து நிலையங்கள் ஒன்று வெளியூர் செல்லும் பயணிக்களுக்காக, மற்றொன்று நகர்புற பயணிக்காக இது தவிர ஆம்னி பேருந்துகளுக்கு தனி இடம் உண்டு.அந்த பேருந்து தான் நம் கல்லூரி வரை செல்லும் என்று ஏறி இடமும் கிடைத்துவிட பெருமூச்சோடு அமர்ந்தேன்.ரயில்வே ஸ்டேஷன் அருகே பேருந்து வந்து கொண்டிருக்கையில் கண்டக்டர் பயணச்சீட்டு கொடுக்க "தம்பி எங்கே?" என்று அவர் கேட்க அண்ணா ரத்தினம் காலேஜ் என்றேன்."தம்பி உக்கடம் வரைக்கும் தான் பா போகும்".சரி ஒரு டிக்கெட் டிக்கெட் கொடுங்க என்றேன்.உக்கடத்தில் பஸ் நிலையத்தில் இறங்குவதற்குள் இந்த பேருந்தின் முன்னால் மற்றுமொரு பேருந்து நின்று கொண்டிருந்தது. அது எங்கள் கல்லூரிக்கு செல்லுமாதலால் வேகமாகபோய் கேட்டு  உறுதிப்படுத்திக் கொண்டு ஏறினேன்.இம்முறை இடம் கிடைக்கவில்லை.60 கிலோமீட்டர் உட்கார்ந்து கொண்டு அல்லவா வந்தோம் என்று எனக்குள் நினைத்துக்கொண்டேன்.கல்லூரியில் கட்டண வசூல் மையத்திற்குள் நுழைந்தவுடன் பத்து பேர் கொண்ட வரிசையில் அவர்களுக்கு பின் நின்றேன்.சிறிது நேரத்தில் அருகில் மற்றுமொரு கட்டணம் வசூல் செய்பவர் வந்துவிட்டார்.அதனால் வரிசை மாறி நின்றேன்.என் முறை வந்தபோது டெபிட் கார்டு எடுத்து அவரிடம் கொடுக்கலாம் என்று நீட்டினேன்.சற்றும் தாமதமில்லாமல் "இல்லப்பா கார்டு Accept பண்றது இல்ல, Cash ஆ கொண்டு வா என்றார்" சரி என்று சொல்லிவிட்டு மெயின் ரோட்டிலுள்ள ATM ல் கார்டை  செருகினேன்.வேலை செய்யவில்லை பதற்றம் அடையாது பக்கத்தில் உள்ள மற்றொரு ATM ல் பணம் எடுக்கலாம் என்று பார்க்கையில் ஒருவர் பணம் எடுத்துக்கொண்டிருந்தார்.அவருக்காக பத்து நிமிடங்களுக்கு மேல் காத்திருக்க வேண்டியிருந்தது.பொறுமையிழந்தவனாக மனத்திற்குள்ளே அவரை திட்டினேன்.திட்டியது கேட்டு விட்டதா என்று தெரியவில்லை, சில கணங்களுக்குப் பிறகு மன்னிப்புக் கோரும் தொனியில் "அண்ணா ஒரே முறை இறுதியாக எடுத்து விடுகிறேன்" என்று கூறினார்.பெரிய தொகை போலிருக்கிறது என்று எண்ணுள் எண்ணிக்கொண்டேன்.என் பின்னால் நாலைந்து பேர் வரிசையில் சேர்ந்துக்கொண்டனர்.அப்பாடா வெளியே வந்துட்டான் என்று அகத்திற்குள்ளேயே கூறிக் கொண்டேன்.தேவையான தொகையை எடுக்க இரண்டு முறை முயற்சிக்க வேண்டியிருந்தது.எடுத்த வேகத்தில் கல்லூரி கட்டணமும் செலுத்தியாயிற்று.செலுத்திவிட்டு வெளியே வந்த பின் என் ஜுனியர்கள் நின்று கொண்டிருந்தனர்.அவர்களிடம் பேச்சு கொடுத்து விட்டு மீண்டும் வீடு திரும்ப பஸ் நிறுத்ததிற்கு வந்தேன்.நீண்ட நேரம் நிற்க வேண்டியிருந்தது.சரி கட்டணம் செலுத்தியதை துறைத்தலைவரிடம் உறுதிப்படுத்திக் கொண்டேன்.பேருந்து வந்தது.ரயில்வே ஸ்டேஷனுக்கு ஒரு டிக்கெட் எடுத்துக் கொண்டேன்.பஸ் எல்.ஐ.சி பஸ் ஸ்டாப் வரும் போது நண்பன் சின்னாவின் ஞாபகம் வந்தது.அவன்தான் கல்லூரி கட்டணம் செலுத்த வரும்போது வீட்டிற்கு சாப்பிட வாடா என்று அழைத்திருந்தான். அவனுடைய இயற்பெயர் சின்ராசு சுருக்கமாக சின்னா. அவன் வீடு இந்த பஸ் நிறுத்தத்திற்கு அருகாமையில் தான் உள்ளது. "டேய் போய் fees கட்டிட்டு சீக்கிரமா வந்துடு,ஊர் சுத்திட்டு இருக்காத" என்று என்  வீட்டில் கூறியதால் அவன் வீட்டுக்கு செல்ல முடியவில்லை.முப்பது நிமிடங்கள் வேடிக்கை பார்ப்பதிலேயே கழிந்தது.ரயில்வே ஸ்டேஷன் பஸ் ஸ்டாப்பில் இறங்கி ப்ரூக் பீல்ட்ஸ் ஷாப்பிங் மாலுக்கு நடக்க ஆரம்பித்தேன்.கட்சி விளம்பரங்கள், போஸ்டர்களை பார்த்துக் கொண்டே நடந்து போய்க்கொண்டிருந்தேன்.அப்போது ரயில்வே பாலம் அருகே பெண் நிர்வாணமாகக் குளித்துக்கொண்டிருந்தாள்.திடுக்கிட்டு வேகமாக நடக்க ஆரம்பித்தேன்.மனநலம் பாதிக்கப்பட்டவளாகவே இருக்க வேண்டும். நீண்ட நாட்களாகவே "புயலிலே ஒரு தோணி" புத்தகத்தை வாங்க வேண்டும் என்று இருந்தேன்.இம்முறை நிச்சயமாக வாங்கி விட வேண்டும் ப்ரூக்பீல்ட்ஸ் ஷாப்பிங் மாலில் உள்ள ஒடிசி கடைக்கு விரைந்தேன்.மூன்றாவது தளத்தில் இருந்த அக்கடை காலி செய்யப்பட்டது அப்போது தான் தெரிந்தது.கடையின் விளம்பர பதாகை மட்டுமே இருந்தது.ஒன்றரை கிலோமீட்டர் நடை வீணானது.மனம் தளராமல் காந்திபுரம் பேருந்து நிலையம் நோக்கி நடக்க ஆரம்பித்தேன்.பசி தான் அவ்வப்போது பாடாய்ப்படுத்தியது.பஸ் ஸ்டாண்டில் உள்ள அண்ணபூர்ணாவில் ஒரு வெஜ் பிரைடு ரைஸ்.பஸ் திருப்பூர் குமார் நகர் ஆர்.டி.ஓ ஆபிஸில் நின்றவுடன் இறங்கி விட்டேன்.புத்தகம் வாங்குவதற்கு போதுமான தொகை இருந்ததால் திருப்பூர் பாரதி புத்தகாலயம் நோக்கி விரைந்தேன்.நீண்ட நாட்களாகவே வாங்க வேண்டும் என்றிருந்த மார்க்சியம் கார்க்கியின் தாய் நாவலை வாங்கி விட என்ற வேட்கையோடு நடக்கத் தொடங்கினேன்.கடை பூட்டியிருந்தது.கடைக்காரரின் எண்ணுக்கு அழைத்தேன்.பதினைந்து நிமிடத்தில் வருவதாக உறுதி அளித்தார்.என்னுடைய வீட்டிலும் அழைத்து புத்தக கடைக்கு வந்திருப்பதாக கூறினேன்.கடைக்கு வெளியில் இடதுசாரி அரசியல் பேசும் பத்திரிகைகள் வைக்கப்பட்டிருந்தன.எடுத்து சிறிது நேரம் வாசித்தேன்."இன்னும் அஞ்சு நிமிஷத்திலே வந்துடறேன் தம்பி","வண்டிய சர்வீஸுக்கு விட்டுருக்கிறேன்,அதான் தம்பி கோவிச்சுகாதீங்க சீக்கிரம் வந்துடறன்" என்பதை  நான் மறுமுறை அழைத்தப்போது கூறினார்.அப்படியே ஒரு பத்து நிமிடங்கள் கழிந்தன.ஷட்டரை திறந்து உள்ளே போனார்.நானும் பின்னால் போய் புத்தகங்கள் தேட ஆரம்பித்தேன்."தாய்" கிடைத்துவிட்டது.அடுத்தப் புத்தகம் தேடிக்கொண்டிருக்கையில் என் தந்தை புத்தகக் கடைக்குள் வந்தார்.அது அவருக்கு பழக்கப்பட்ட இடம்தான் (மார்க்ஸிஸ்ட் அலுவலகம்) என்பதால் கண்டுபிடித்து வந்துவிட்டார். வால்காவிலிருந்து கங்கை வரை என்ற புத்தகத்தையும் வாங்கிவிட்டேன். அதன் பிறகு சாவித்திரி போட்டோ ஹவுஸில் கேனான் 1500டி கேமராவை வாங்கிவிட்டாதாயிற்று. தான் நினைத்தது போலவே கேமரா வாங்கிவிட்ட பூவலிங்கத்தின் சுயபுலம்பல் இது.இதை என்னிடம்  கூறி ஒரு வருடத்திற்கும் மேல் ஆகிறது

      -கனிஷ்கர்

கருத்துகள்

பிரபலமான இடுகைகள்