செவந்திகா

 அவள் பெயர் செவந்திகா. இன்னமும் மழலைக்குரிய புன்னகைக் கொண்டிருப்பவள். அவள் மழலை தானே அப்படித்தானே இருக்க வேண்டும்.அவளுக்கு smartphone உபயோகிப்பது சுத்தமாகப் பிடிக்காது. எப்போதும் தன்னுடைய விருப்பச்  செயல்பாடான ஓவியம் வரைந்து கொண்டே இருப்பாள். சிறு வயது முதல் அவள் வீட்டின் சுவற்றில் கிறுக்கிய கிறுக்கல்களின் சுவடுகள் இன்னமும் இருக்கின்றன. நாளடைவில் அதுவே அவளது பழக்கமாகி போனது. எப்போதும் ஓவியம் வரைந்து கொண்டே இருப்பாள். அவ்வாறு வரையும் போது அவளுக்கு ஒருநாளும் சலிப்பேற்பட்டதில்லை. தான் வரையும் ஓவியம் முழுமை பெறாமல் அவள் அவ்விடத்தை விட்டு நகரக்கூட மாட்டாள். செவந்திகாவின் மழழைப் பருவம் இப்படிப் போய்க்கொண்டிருக்க, அவளை திடீரென்று பள்ளியில் சேர்த்துவிட்டார்கள். ஆரம்பத்தில் அழுகையோடு எல்லா குழந்தைகளையும் போல் தான் பள்ளிக்கு செல்ல துவங்கினாள், நாளடைவில் சரியாகிவிட்டது. இருந்தாலும் பள்ளியில் பாடம் எடுக்காத நேரத்திலும், தனக்கு கிடைக்கும் நேரத்திலும் ஓவியம் மட்டுமே வரைந்து கொண்டிருப்பாள். அதற்கு ஏற்றவாறு பென்சில்கள், கலர்-ஸ்கெட்ச், தேவையான தாள்கள் என எல்லாமே அவள் புத்தகப்பையில் எப்போதுமே இருக்கும். அவளால் எண்களையும்,எழுத்துக்களையும் புரிந்து கொள்ளவே முடியவில்லை. எப்போதும் ஆசிரியர்களிடம் திட்டு வாங்குவதையே வாடிக்கையாக கொண்டிருப்பவள். அவளுடைய ஆசிரியர்கள் ஒவ்வொருவரும் இதுபற்றி கூறவே அவளுடைய பெற்றோர்கள் சில நாட்களாக ஓவியம் வரைய அனுமதிப்பதே இல்லை. இருப்பினும், அவர்களுக்கு தெரியாமல் வரைந்துகொண்டு தான் இருப்பாள். பள்ளியில் விளையாட்டு நேரங்களில் கூட அவள் மைதானத்தில் குச்சியை வைத்து கிறுக்கி கொண்டு இருப்பாளே தவிர யாருடனும் சேர்ந்து விளையாடுவதில்லை. ஒருநாள் அவள் பள்ளி வகுப்புகள் சீக்கிரமே முடிந்ததால் , ஒரு மணி நேரம் முன்னதாகவே வீட்டுக்கு வந்துவிட்டாள். அப்போது வீட்டின் அருகில் உள்ள பூங்காவிற்கு செல்ல விரும்புகிறாள். ஆனால் செவந்திகாவின் அம்மாவோ "Homework" முடித்தால்தான் நீ செல்ல முடியும் என்று சொல்லிவிட, சிறு அழுகைக்கு பின் தன்னுடைய வரைகலை பொருட்களை எல்லாம் எடுத்து கொண்டு கிளம்புகிறாள். இம்முறை தண்ணீர் புட்டியையும் எடுத்துக்கொண்டே கிளம்புகிறாள்.வேகமாக சென்றவள் பூங்கா மேசை மீது அமர்ந்து ஒரு ஓவியம் வரையத் தொடங்குகிறாள்.அவ்விடத்தில் அவளை தவிர பூங்காவைப் பராமரிக்கும் பெண் ஒருவரும் இருக்கிறார். ஒரு மரத்தினுடைய ஓவியம் அது. பூக்களோடு இருக்கும் மரம். அவளுக்கு திடீரென்று ஒரு எண்ணம் தோன்றவே, ஒரு சிறு குச்சியை எடுத்து வந்து குழி பறிக்கிறாள். அந்த சிறு குழிக்குள் தன்னுடைய அந்த மரம் இருக்கும் ஓவியத்தை உள்ளே வைத்து தண்ணீர் ஊற்றுகிறாள். மீண்டும் அந்த குழியில் மண்ணை இட்டு நிரப்புகிறாள். கை எல்லாம் ஒரே மண்.சில நிமிடங்களில் செவந்திகாவின் அம்மா அவளை அழைத்துச் செல்ல  அவ்விடத்திற்கு வந்து விடுகிறார். கை ஏன் மண்ணா இருக்குது? என்று சொல்லி, அவளை சீக்கிரம் போய் "Homework" செய்யுமாறும் கூறினார். ஆனால் செவந்திகாவிற்கோ அவ்விடத்தை விட்டு நகர மனமில்லை.  இக்காட்சிகளை அங்குள்ள பூங்காவை பராமரிக்கும் பெண் பார்த்துக்கொண்டே இருந்தார். நிச்சயமாக மரம் வளரப் போவதில்லை என்பது அப்பெண்ணுக்குத் தெரியும். ஆனால் குழந்தையின் நம்பிக்கையை ஏன் பொய்யாக்க வேண்டும் என்று சில நேரம் கழித்து ஓவியம் புதைக்கப்பட்ட இடத்தில் வேப்பங் கொட்டைகளை உள்ளே இட்டு மூடுகிறாள். நிச்சயமாக அச்சிறுமி மரம் முளைப்பதைப் பற்றி தனக்குள் கனவு கண்டு கொண்டிருப்பாள் என்பது அப்பெண்ணுக்கு தெரியாமலா இருக்கும்? 

அடுத்த நாள் அந்த இடத்திற்கு செவந்திகா வந்து மரம் முளைத்திருக்கிறதா? என்று பார்த்தாள். ஏமாற்றத்தோடு திரும்பி சென்றாள். இவ்வாறாக சில நாள்கள் செவந்திகா ஏமாற்றம் அடைவதையே வாடிக்கையாகக் கொண்டிருந்தாள். மரம் முளைக்காமல் போய் விடுமோ என்று ஒருநாள் இறுதியாக சென்று பார்த்த போது,  அவ்விடத்தில்  சிறு செடி ஒன்று முளைத்திருக்க மகிழ்ச்சியோடு வீட்டுக்கு சென்றாள்.          

                                                - கனிஷ்கர்

 

கருத்துகள்

பிரபலமான இடுகைகள்