படச்சுருள் என்ற சினிமா இதழ் குறித்து.

"படச்சுருள்" மாத இதழ் குறித்த அறிமுகம் அளித்தது குறும்படத்திற்கான அறிவிப்பு போஸ்டர் தான்.பின்னர் நாங்கள் படச்சுருள் குறித்து இணையத்தில் தேடினோம்.அதேபோல் சினிமா குறித்த அதன் செயல்பாடுகளை முகநூலின் வாயிலாக அறிந்து கொண்டோம்.முழுக்க முழுக்க சினிமா எனும் பெருங்கலை குறித்த வார இதழையோ அல்லது மாத இதழையோ நாங்கள் இதுவரையிலும் அறிந்ததில்லை.விஷுவல் கம்யூனிகேஷன் மாணவர்களாக இருந்துகொண்டு நாங்கள் படச்சுருள் போன்ற இதழ் குறித்து அறியாதிருப்பது ஏமாற்றத்தையே அளிக்கிறது.ஆனந்த விகடன் போன்ற இதழ்களில் தான் சினிமா குறித்த கட்டுரைகள் சினிமா விமர்சனம், நேர்காணல்கள்,பேட்டிகள் போன்றவற்றை வாசித்திருக்கிறோம்.அவ்வாறு வாசிக்கும் போது சில தகவல்கள் இடம்பெறாமல் இருக்கும்.அந்த இதழில் தொடர்கள், சிறுகதை, கவிதைகள்,சில அரசியல் கட்டுரைகள் போன்றவை அதிக அளவில் இடம்பெறுவதால் சினிமாவுக்கான இடம் சற்றுக் குறைவுதான்.அதையும் விடுத்து சினிமா சார்ந்த நிகழ்வுகளை தொலைக்காட்சிகளில் செய்திகளாகத் தான் பார்க்க முடிகிறது.அதுவும் "வாம்மா மின்னல்" என்ற வேகத்தில் போய் விடுகிறது.இது போன்ற நிகழ்வுகள் நம்மை சினிமா சூழல் குறித்து அறியாதிருக்கவே செய்கிறது.ஆனால் படச்சுருள் இதழின் அணுகுமுறை வாசகனை சினிமா குறித்தும் வாசிக்கச் செய்கிறது.எங்கள் ஆதர்ச எழுத்தாளர் சாரு நிவேதிதா தன்னுடைய Blog ல் படச்சுருள் குறித்து அறிமுகப்படுத்தி இருந்தார்.அதைக் காணும்போது பெருமகிழ்ச்சி அடைந்தோம் ஏனெனில் உலக சினிமா என்பது அமெரிக்கா சினிமா மட்டுமல்ல என்பதை நாங்கள் புரிந்துக் கொண்டது அவர் மூலம் தான்.அவரின் "சினிமா அலைந்து திரிபவனின் அழகியல்" எங்கள் ஆல் டைம் ஃபேவரைட். உலக சினிமா, இந்திய சினிமா, தமிழ் சினிமா என்று அனைத்திலும் கூர்நோக்கு கொண்ட இலக்கியவாதி படச்சுருள் போன்ற சினிமா இதழை தன் வாசகர்களுக்கு அறிமுகப்படுத்திய மகிழ்ச்சி அது.முகநூலில் படச்சுருள் இதழின் அட்டைப் படங்களை பார்க்கும் போது அதில் உள்ள கட்டுரைகளும் விமர்சனங்களும் வாசகர்களுக்கு சினிமா குறித்த முன்னகர்வு ஏற்படுத்தும் என்பதை அதில் உள்ள தலைப்புகளை கொண்டு அறிந்து கொண்டேன்.இதுவரையிலும் விவாதிக்கப்படாத பல்வேறு தலைப்புகள் இடம்பெற்றிருந்தன.நாங்கள் கல்லூரி தொடங்கியது முதல் நிறைய சினிமாக்கள் கண்டிருக்கிறோம்.அயல் சினிமா உட்பட.இருப்பினும் சினிமா விமர்சனம் குறித்து படிப்பது சற்று திருப்தியளிக்காமலே உள்ளது.நான் படித்த இதழ்கள் அனைத்திலும் ஓர் திரைப்படத்தின் சுருக்கத்தை அதன் விமர்சனம் என்று எழுதுகிறார்கள்.அது ஏற்புடையதாக இல்லை.அது திரைப்படம் பார்க்க தடை ஏற்படுத்துகிறது அல்லது விமர்சனம் எனுங் கலையை சற்று தொய்வு ஏற்படச் செய்கிறது.அதற்கான ஒரு மாற்று இதழாக படச்சுருள் இதழ் இருந்தால் நலம்.அதை வாசகர்களாகிய நாங்கள் எம் வாசிப்பனுப்பவத்தின் மூலம் முன் வைப்போம்.எங்களுக்கு படச்சுருள் இதழ் குறித்த தகவல் நேற்று தான் தெரிந்தது அதாவது கி.பி இரண்டாயிரத்து இருபத்து ஒன்று ஜூன் இருபத்து எட்டு மதியம் ஒரு மணி வாக்கில்.குறும்படத்தை அனுப்ப வேண்டிய கடைசி நாள் முப்பது ஜூன்.ஆதலால் அது குறித்த சிந்தனையில் ஈடுபட்டதாலும் அதற்கான படப்பிடிப்பு மேற்கொண்டதாலும் எங்களால் நேரம் ஒதுக்கி வாசிக்க முடியவில்லை.இருப்பினும் இனி வரும் கணங்களில் வாசிப்போம் என்பதை.சொல்வதில் தயக்கம் ஏதும் இல்லை.நாங்கள் திரைப்படத்துறையில் எழுத்தாளராகவும்,ஒளிபதிவாளராகவும்,இயக்குநராக வேண்டும் என்று காட்சித் தொடர்பியல் துறையை தேர்ந்தெடுத்தோம்.இலக்கிய வாசிப்பு, சூழல்களை உற்றுநோக்கல் என்று எங்களுடைய இலட்சியங்களை அடைய உதவும் திறன்களை வளர்த்துக் கொண்டே இருக்கிறோம்.அவ்வாறு இருக்கையில் சினிமா சார்ந்த விஷயங்கள் அறிந்து கொள்வதும் அவசியம் தான்.அதைக் கலைப் பூர்வமாக அணுக படச்சுருள் இதழ் பங்களிக்கும் என்று விழைகிறோம்.அதேபோல் எங்களுக்குள் உள்ள படைப்பாக்கச் சிந்தனையை வெளிகொணரும் பொருட்டு படச்சுருள் இதழ் சார்பில் நடத்தும் குறும்பட போட்டியை ஓர் நல்வாய்ப்பு என்றே கருதுகிறோம்.

கருத்துகள்

பிரபலமான இடுகைகள்