கேள்விக்குறி?

நம் வாழ்வில் ஒவ்வொரு நாளும் ஓராயிரம் கேள்விகளை நாம் நமக்குள்ளே கேட்டுக் கொள்கிறோம்.ஒவ்வொரு கேள்வி உதிக்கும் போதும் முன்னர் வந்த கேள்வி மறந்துவிடுகிறது.ஆனால் ஒரு சில கேள்விகளோ நம்முள் நீங்காமல் அப்படியே தங்கிவிடுகிறது.பொதுவாக இந்த கேள்விகளோ வயதுக்கு வயது மாறுபடுகிறது.சிறுவனாக இருக்கும் போது நம்முள் எழும் கேள்விகளை இளைஞனாக இருக்கும்போது நினைத்துப்பார்க்கையில் சற்றே ஒரு மென்புன்னகை எழுகிறது.ஆம், சிறுவயதில் பழங்கள் சாப்பிடும்போது விதைகளை விழுங்கிவிட்டால் உடனே "ஐயோ ஒரு வேளை மரமோ செடியோ முளைத்து விட்டால் என்ன செய்வது?" போன்ற கேள்வியை இதைப் படிக்கும் பலரும் தங்கள் சிறுவயதில் தங்களுக்குள் மட்டுமில்லாமல் பலரிடம் சென்று  கேட்டிருக்கலாம். சில நேரங்களில் நம் கேள்விகளால் "அதிகபிரசங்கி" என்ற அடைமொழி வாங்கியிருக்கலாம். கேள்வி உன்னுள் உதிக்கும் போதுதான் மேன்மையுறு மனிதனாக மாறிக்கொண்டிருக்கிறாய் என்று புகழும் கிடைத்திருக்கலாம்.எப்படி இருப்பினும் இந்த கேள்வி என்ற ஒன்று மட்டும் இல்லையெனில் நம்முடைய வாழ்வு அர்த்தமற்று போயிருக்கும் என்பது மட்டும் தெளிவான ஒன்று. அதிகாரத்தில் இருப்பவன் தன் அதிகாரம் செலுத்துபவன் மீது தன் கேள்வியை வைக்கிறான்.அதிகாரத்தை எதிர்ப்பவன் தன் கேள்விகளால் அதிகார மையத்தைத் தகர்க்கிறான். நான் பலமுறை கேள்வி கேட்க தயங்கியதுண்டு.ஒருவேளை நம்மை ஏதாவது எளக்காரமாக நினைத்துவிடுவார்களோ அல்லது திட்டிவிடுவார்களோ அல்லது.
இதற்காகவே பலமுறை என்னுள் எழும் கேள்விகள் நாவின் நுனி வரை வந்து அப்படியே வந்த வழி சென்றுவிடும். இங்கு பலரது வாழ்க்கை இப்படித் தான் சென்றுக்கொண்டிருக்கிறது.நம்முடைய கருத்தை பகிர மட்டுமில்லாமல் நம் முன்வைக்க விரும்புகிற கேள்வியைக் கூட கேட்க தயக்கம் ஏன் ஏற்படுகிறது? நம்முடைய கல்வி முறையான மெக்கல்லே அடிமைக்கல்வி முறையின் வெளிப்பாடுதானே இது.சரி என் கல்லூரி வாழ்வின் தொடக்கத்தில் ஒருநாள் நடந்த விஷயத்தை இங்கு பதிவிட விரும்புகிறேன்.அதனால் எனக்கு ஏற்பட்ட கேள்வி 
"ஏமாத்தறது தப்புன்னு ஏன் யாருக்கும் தோண மாட்டுது" என்று.
கல்லூரி நுழைவாயிலே பேருந்து நிறுத்தம்.நீண்ட நேர காத்திருப்பிற்குப் பிறகு ஒரு பேருந்து வந்தது.அரசுப் பேருந்து தான்.சரியாக 35 நிமிடங்களில் உக்கடம் பேருந்து நிலையத்தில் இறங்கினேன்.பேருந்து அதுவரை தான் செல்லும் என்பதை பேருந்து நடத்துனர் கூறியதில் இருந்து தெரிந்தது.அடுத்து அங்கிருந்து ரயில்வே ஸ்டேஷன் செல்ல மற்றுமொரு பேருந்து ஏறினேன்.நூறு ரூபாய் நோட்டு ஒன்றை நீட்டினேன்.வாங்கி ஏழு ரூபாய் என்று கூறி தொண்ணூறு ரூபாய் மட்டுமே மீதம் எனக்குக் கொடுத்தான் அந்த நடத்துனர்.மூன்று ரூபாய் தராமல் பேருந்தின் முன்பக்கம் சென்றுவிட்ட நடத்துநர் பயணச்சீட்டு வழங்கவே இல்லை.தனியார் பேருந்து தானே.அதனால் அவருக்கோ எனக்கோ பிரச்சினை இல்லைதான்.சிறிது நேரத்தில் ஒரு ஸ்டாப்பில் "ரயில்வே ஸ்டேஷன் போறவங்க எல்லாம் இறங்கிகோங்க பஸ் வேற வழியா போது" என்று கூறினார். நானோ ஊருக்கு புதுசு.
"இருக்கவே இருக்கு கூகுள் மேப்" என்று ரயில்வே ஸ்டேஷனை சென்றடைய வழித்தடத்தைக் கண்டுபிடித்தேன்.நடந்து சென்று திருப்பூருக்கு ரயில் எப்போது என்று பார்த்தால் மாலை 6.30 க்கு தான் என்று தெரிந்தது.சரி அப்படியே சிறு நடை போட்டு டீ குடித்து வரலாம் என்று கிளம்பினேன். கடைக்கு வெளியே நின்று கண்டக்டர் கொடுத்த தாள்களில் ஐம்பது ரூபாயை எடுத்தேன். ஏதோ குழந்தைகள் விளையாடும் பொம்மை நோட்டு போன்று இருந்தது.சரி நாம் ஏமாற்றப்பட்டுவிட்டோம் என்று உணர்ந்து கொண்டேன். ம்ம் அப்படியெல்லாம் இருக்காது என்று அந்த ஐம்பது ரூபாய் நோட்டை பலரிடமும் கொடுத்து பரிசோதனை செய்ய சொன்னதில் அனைவரிடமும் கிடைத்த பதில் "கள்ளநோட்டு" என்பதுதான். இதுகுறித்து பலமுறை நினைத்து நினைத்து வருந்தியிருக்கிறேன். நீண்ட நாட்களாக என் வீட்டில் ஒரு பெட்டியில் இருந்த அந்தத் தாளை ஒருநாள் கிழித்து எறிந்து விட்டேன்.
   - கனிஷ்கர்.

கருத்துகள்

  1. கூட்டமான இடங்களில் குழப்பங்கள் நிகழ்வதுண்டு.மனிதனுக்கு அவசரம் இருக்கும் வரை, கூட்டமான இடங்களில் சில மனிதர்கள் சில மனிதர்களை கூட்டம் கூட்டமாக ஏமாற்றிக் கொண்டுதான் இருப்பார்கள்.

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

பிரபலமான இடுகைகள்