புதுமைப்பித்தனின் 6 சிறுகதைகளை முன்வைத்து.

எதார்த்தமாக புத்தக கடையில் ஏதோ ஒரு புத்தகம் வாங்கி வரலாம் என்றுதான் நுழைந்தேன்.அப்போது சாரு நிவேதிதா தலைமையில் நடைபெற்ற எழுத்துப்பட்டறை நினைவுக்கு வந்தது.அவர் அதில் எழுத்தாளனாக தயார்படுத்திக் கொள்ள எவ்விதங்களில் தயாராக வேண்டும் என்று கூறும்போது முதலில் புதுமைப்பித்தன் எழுத்தில் இருந்தே தொடங்குதல் நலம் என்று கூறினார்.நானோ சாரு நிவேதிதாவிலிருந்து தொடங்கிவிட்டேனே என்ன செய்வது என்று நினைத்துக்கொண்டு புதுமைப்பித்தன் கதைத்தொகுப்பை வாங்கினேன்.
தொகுப்பின் பெயர் "எப்போதும் முடிவிலே இன்பம்". வாங்கிய பிற்பாடு சில நாட்கள் இப்புத்தகத்தை தொடக் கூட இல்லை.இப்புத்தகத்தின் அட்டையை பார்க்கும்போது எல்லாம் குற்றவுணர்ச்சி தான் மிகுந்திருக்கும்.சரி இன்று படித்தே தீர வேண்டும் என்று அக்டோபர் மாதத்தின் ஏதோ ஒரு நாள் என்று வைத்துக் கொள்ளலாம் எடுத்தேன் தொகுப்பாசிரியர் ஜா.ஜா அவர்களின் புதுமைப்பித்தனின் புனைவுலகுக்குள் புகுமுன் என்ற முன்னுரையைப் படித்தேன்.அத்வைதம்,சாத்திரங்கள் அது இது என்று எழுதப்பட்ட முன்னுரை அது.இது என்னடா? நாம் இதுவரை கேள்வியேபடாத வார்த்தைகளால் நிரம்பியிருக்கிறதே என்று முன்னுரையை படித்துமுடித்தேன்.



முதல் கதை வாடாமல்லிக்கை கல்லூரி நூலகத்தில் அமர்ந்து படித்ததால் அழுகையை வெளிப்படுத்த முடியவில்லை.தனியாக இருக்கும் போதோ அல்லது வீட்டில் அமர்ந்து மட்டும் இக்கதையை படித்திருந்தேன் என்றால் நிச்சயமாக அழுது தீர்த்திருப்பேன்.ஆம் கதை எனக்குள் ஏற்படுத்திய தாக்கம் அப்படி புதுமைப்பித்தனின் ஒட்டுமொத்த கதைகளுக்கு ஒரு சோற்றுப்பதமே இக்கதை.ஒன்றரை ஆண்டுகள் தமிழ் இலக்கிய சூழலில் வாசகனான நான் இப்பேர்பட்ட ஒரு கதையை வாசித்ததேயில்லை.ஒரு விதவைப் பெண் சந்திக்கும் அவலங்களே கதைக்கரு.இறுதியில் அவளுடைய பிரேதம் கிணற்றில் மிதந்துக்கொண்டிருக்கும்.இரண்டாவது கதை கடவுளும் கந்தசாமி பிள்ளையும் என்ற சற்று நகைச்சுவைத் தன்மைக் கொண்டு சமூகக் காரணிகளைச் சாடுகின்ற கதை.கந்தசாமி பிள்ளை எனும் பிரதான பாத்திரம் சித்த வைத்திய பத்திரிகை நடத்துவார்.கடவுள் இவரை தேடி வந்து இவருடனே பயணித்து மனிதனுக்கு என்றே இருக்கும் சில அற்ப புத்திகளை கண்டுகொள்வார்.நம் பத்திரிகை ஆசிரியர் கந்தசாமி பிள்ளை கடவுளிடமே தம் பத்திரிகைக்கான ஆயுள் சந்தாவை விற்றுவிட்டார்.இறுதியாக கடவுள் நொந்து போய் உலகை விட்டு தம் லோகத்திற்கே பிரயாணம் ஆவார்.
செல்லம்மாள் சிறுகதை இவர் கதைகளில் நான் இறுதியாகப் படித்தது.மனப்பிறழ்வு ஏற்படுத்திய கதை.உடல்நலம் குன்றிய மனைவியுடன் தம் வாழ்நாளைக் கழித்துக்கொண்டிருக்கும் பிரமநாயகம் பிள்ளைக்கு மனைவி இறந்து போவது மகிழ்ச்சியை தரவில்லை.கிட்டத்தட்ட மனநோயாளியை விட மோசமான நிலையை கொண்டிருந்த தம் மனைவியை அவர் பார்த்துக்கொண்ட விதத்தினைப் பார்க்கும் போது கண்ணீர்தான் வருகிறது ,துயர் நிறைந்த கதை .கதையின் தொடக்கத்திலே செல்லம்மாளுக்கு மூச்சு ஒடுங்கி நாடி அடங்குகிறது.இறுதியில் இரு சங்குகள் ஒலிக்கப்படுகின்றன.நான் தமிழில் படித்த விறுவிறு கதை என்று காஞ்சனையை சொல்லலாம்.படிக்க ஆரம்பித்த போது காந்திபுரம் டூ திருப்பூர் பஸ் ஏறி அமர்ந்திருந்தேன்.கதையோ 14 பக்கங்கள், நானோ ஒரு மணி நேரத்திற்கு 3 பக்கங்கள் வீதம் படிக்கக்கூடியவன்.ஆனால் பேருந்தை விட்டு இறங்குவதற்குள் படித்துவிட்டேன்.அன்று புறவழிச்சாலையில் ஏற்பட்ட விபத்தின் காரணமாக அடர்ந்த வனப்பகுதிப்போல் இருக்கும் இடங்களுக்கு எல்லாம் சென்று விட்டுதான் திருப்பூர் சென்றது.பேருந்து இருக்கை நுனியில் உட்கார்ந்து கொண்டு தான் இந்த கதையைப் படித்து முடித்தேன். நீங்கள் புதுமைப்பித்தனின் வேறு எந்த கதையை படிக்காவிட்டாலும் பரவாயில்லை.இது ஒன்றையாவது படித்துப்பாருங்கள்.குறிப்பு: படித்து விட்டு மூன்று நாட்கள் காய்ச்சல் வந்து கிடந்தேன்.கயிற்றரவு கதை பரமசிவம் பிள்ளையின் மரணத்தைப் பேசுகிறது.புதுமைப்பித்தனின் எல்லா கதைகளுக்கும் ஒரு பொது மையம் உண்டு எனில் அது மரணமே!.
ஆம் இவரின் கதை மரணம் குறித்தே பெரும்பாலும் பேசுகின்றன.பரமசிவம் பிள்ளை கதாபாத்திரம் தனது அப்பா தோளில் விளையாடியது முதல் சுடுகாட்டில் எரிந்து சாம்பல் ஆனது வரையிலும் கதை சொல்லப்பட்டிருக்கிறது.இதற்கிடையில் மனிதனின் காதல், காமம்,ஆசை என்று விவரணைகள் நம்மை ஒரு தத்துவ வகுப்பிற்கு அழைத்து செல்கிறது.பரமசிவம் பிள்ளை பாம்பு கடித்ததால் இறக்கிறார்.
ஒருநாள் கழிந்தது ஒரு வெகுஜன பத்திரிகையில் வெளிவரும் கதையைப் போல் இருந்தாலும் அன்றைய 50 களின் பொருளாதார ஏற்றத்தாழ்வுகள் வறுமை நிலை குறித்து மிகச்சிறந்த பதிவு செய்த கதைகளில் ஒன்றாக திகழ்கிறது.பத்திரிக்கையில் கதை ஆசிரியராக இருந்த முருகதாசர் விளம்பர கம்பெனியில் ஒரு வேலை பெறுகிறார்.இருப்பினும் மளிகைக் கடைகாரனிடம் மட்டும் இல்லை வீட்டிற்கு வரும் நண்பர்களிடமும் கடன் வைக்கிறார்.வீட்டில் கிழிந்து கிடக்கும் பாய் மூலம் வறுமையை விளக்குகிறார் புதுமைப்பித்தன்.முருகதாசரின் குடும்பத்திற்கு ஒருநாள் கழிந்தது.
                - கனிஷ்கர்.

கருத்துகள்

பிரபலமான இடுகைகள்