வாடிவாசல் குறுநாவல் வாசிப்பனுபவம்.
வாடிவாசல் எனும் இந்நெடுங்கதையை வாசித்ததன் மூலம் என்னுள் நிறைவேறாதிருந்த ஒன்றை நிறைவேற்றிக்கொண்டேன்.ஆம் ஜல்லிக்கட்டை நேரடியாக சென்று காண வேண்டும் என்பது சிறு வயது முதலே என் உள் இருந்த விருப்பங்களில் ஒன்றாக இருந்தது.பொங்கல் வந்தால் போதும் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு, பாலமேடு ஜல்லிக்கட்டு மற்றும் அவனியாபுரம் ஜல்லிக்கட்டு என்று டி.வி சேனல்கள் போட்டிப் போட்டுக் கொண்டு ஒளிபரப்பிக்கொண்டுதான் இருக்கின்றன.இருப்பினும் நேரடியாக சென்று காண வேண்டும் என்ற விருப்பம் இந்நாவலின் மூலம் தான் நிறைவேறியிருக்கிறது.மதுரையின் மேற்கு வட்டாரங்களே கதைக்களம்.வழக்கமான பழி வாங்கும் கதை தான் என்றாலும் அதன் விவரணைகள் சற்று வியப்பூட்டும் வகையில் இருப்பதே நாவலின் பலம்.பிரதான கதாப்பாத்திரமான பிச்சி தன் தந்தையின் மரணத்திற்கு பழி தீர்த்துக் கொள்ள ஜமின்தார் காளையை பிடிக்க வேண்டும் என்ற இலட்சியதோடு வாடியில் இறங்குகிறான்.அந்த காளையை பிடிக்கிறானா? அல்லது அக்காளையின் கொம்புக்கு தன் குடலைக் குத்தும் வாய்ப்பைக் கொடுக்கிறானா? இல்லை அச்சத்தில் மாட்டை அணையும் இலட்சியத்தை விட்டுவிடுகிறானா? அல்லது வேறு இடர்பாடுகள்தான் இருக்கின்றனவா? என்பதை இக்குறுநாவலை அல்லது நெடுங்கதையை படித்து பார்க்கையில் நாம் தெரிந்துகொள்ளலாம்.கதாபாத்திரங்களும் கதையின் கச்சிதத்தை உறுதி செய்கின்றன.பிச்சியின் மனவலிமை,காளை பற்றிய அவனது வியூகங்கள்,கண நேர பாய்ச்சல் போன்றவை அவனை சிறந்ததொரு தேர்ந்த மாடுபிடி வீரனாக அடையாளப்படுத்துகிறது.ஜமீன்தாரும் பிச்சியும் ஒரே சமூகத்தைச் சேர்ந்தவர்கள் தான் என்றாலும் பொருளாதார வேறுபாடு பிச்சியை அடிமையாக்குகிறது.அவற்றின் விளைவாக ஜமீன்தார் முன் நிற்கும் போது கையை மார்பில் வைத்துக் கொண்டு தான் நிற்கிறான்.இது போன்ற செயல்களை செய்ய நிர்ப்பந்திக்கப்படுகிறான்.ஆனால் மரியாதை ஜமீனுக்கு மட்டும் தான் அவரது காளைக்கு அல்ல என்பதையும் அவன் பழிவாங்கவே தன் காளையை வீழ்த்தும் நோக்கத்தில் வந்திருக்கிறான் என்பதையும் பிச்சி நேரடியாகவே ஜமீனுக்கு உணர்த்தி விடுவான். முருகு என்றொரு எதிர்மறை கதாபாத்திரம் அவ்வவ்போது வாடியில் கலகமேற்பட செய்கிறான்.சக மாடுபிடி வீரன் தான் என்றாலும் இவனது பொறாமை குணத்தால் விரைவாகவே வாடியில் அவமானத்துக்கு ஆளாகிறான்.மருதன்,கிழவன் பாத்திரங்கள் கதைக்கு உத்வேகம் அளிக்கின்றன.வட்டார நிலவரம்,வாடிவாசலுக்கு வரும் மாடுகளை பற்றிய வர்ணனைகள், வட்டார வழக்கில் மாட்டின் பெருமைகள் என்று நாவல் படு சுவாரசியமாக செல்கிறது.ஜல்லிக்கட்டு காட்டுமிராண்டி விளையாட்டு அல்ல என்பதை மெய்ப்பிக்கும் கதைதான் "வாடிவாசல்".இறுதியாக ஜமீன் தன் காளை காரியை சுட்டு வீீீழ்த்துகிறார்.
-கனிஷ்கர்
கருத்துகள்
கருத்துரையிடுக