Excellent (எக்ஸலண்ட்) - உன்னதம் உணர்த்தும் கட்டுரைகள் பா.ராகவன்.
சில நாட்களாக எந்த ஒரு புத்தகத்தையும் முழுமையாக வாசிக்க முடியாது பீடித்திருந்தேன்.கட்டுரைகளையும் எழுதி விடவில்லை.சில கட்டுரைகள் எழுத முயற்சித்தேன் அதுவும் முற்றுப் பெறவில்லை.அப்பொழுதுதான் எழுத்தாளர் செல்வேந்திரன் எனக்கு பரிந்துரை செய்த எக்ஸலண்ட் புத்தகம் நினைவுக்கு வரவே அதை உடனடியாக வாங்கினேன்.அவர் தான் இப்புத்தகத்தை எனக்கு அறிமுகம் செய்தவர்.எந்த துறையில் மேன்மை அடைய முயற்சித்தாலும் அதில் அதிகபட்ச உன்னத நிலையை அடைய இப்புத்தகம் நிச்சயமாக உதவும் என்றே நினைக்கிறேன்.என்னுடைய வாசிப்பின் அடிப்படையிலே இதனைச் சொல்கிறேன்.வெகுஜன எழுத்தாளர் ஜே.எஸ் ராகவன் முதல் செவ்வியல் எழுத்தாளரான காப்ரியேல் கார்ஸியா மார்கோஸ் (Gabriel Garcia Marques) வரையிலும் அவர்களின் உன்னத நிலைகளை அவர்களுடைய வாழ்க்கை சம்பவங்கள் மூலமே குறிப்பிடுகிறார்.ஒரு நூற்றாண்டு கால தனிமை (One Hundred years solitude) நூலுக்காக 18 மாதங்கள் ஒரு அறையில் தங்கி வெளி உலகே அறியாது குளிக்காமல் தாடி வளர்த்துக் கொண்டு கப்படித்துக்கொண்டு அந்த மகத்தான படைப்பை எழுதி முடித்தார்.ஆரம்பத்தில் அவரை புறம் பேசிய பலர் நாவலின் வெற்றியைக் கண்டு திகைத்தனர்.கடந்த நூறு வருடங்களில் இப்படியொரு நாவல் வெளிவரவேயில்லை என்று எழுத்தாளர் சல்மான் ருஷ்டி புகழும் அளவிற்கு மட்டுமல்ல விற்பனையிலும் அல்லவா பல கோடிகள் .இது நிகழ எப்படிப்பட்டதொரு உன்னத நிலை அவருக்கு தேவைப்பட்டிருக்கும்.அதேபோல் இளையராஜாவின் உன்னதநிலைப் பற்றி குறிப்பிடப்பட்ட வரிகள் நிச்சயமாக மெய்சிலிர்க்கவே வைக்கிறது.ஆம் "ஹே ராம்" படத்தில் வரும் இசைதான் அது. முதலில் அந்தப் படத்திற்கு இசையமைக்க ஒப்பந்தமானவர் வயலின் மேதை எல்.சுப்ரமணியம் படப்பிடிப்பு, எடிட்டிங் என்று எல்லாம் முடிந்தவுடன் கமலுக்கு அந்தப் படத்திற்கு அந்த இசை ஒத்துவரவில்லை என்று தெரியவரவே இளையராஜாவை நாடுகிறார்.சில சங்கடங்களுக்குப் பிறகு அவரும் இசையமைக்க ஒத்துக் கொள்கிறார்.ஆனால் புதிதாக இசையமைத்தால் மறுபடியும் ஷூட்டிங் ஆரம்பிக்க வேண்டும் என்று கமல் கூறியிருக்கிறார்.ஆனால் இளையராஜாவோ அதற்கான அவசியம் ஏற்படாது, இருக்கும் காட்சிகளுக்கே பாடல் வரிகள் உட்பட எல்லாவற்றிற்கும் தானே இசையமைத்து தருவதாக கூறியிருக்கிறார்.உதட்டசைவு,கதை நகர்வு இவற்றைக் கொண்டு மட்டுமே இசையமைத்திருக்கிறார்.இதுதானே உன்னதம்.இசையோடு அவர் இரண்டற கலந்திருந்தால் தானே அது சாத்தியம்.இன்றைக்கும் கேட்டால் இதம் தரும் பாடல்கள் அல்லவா அந்த திரைப்படத்தில் இடம்பெற்றிருக்கிறது.இதே போல் மற்றுமொரு இசையமைப்பாளர் எனக்கு மிகவும் பிடித்த என் இசை ரசனையை அடுத்த கட்டத்துக்கு கொண்டு சென்ற இசையமைப்பாளர் யானி (Yanni). குறித்தும் புத்தகம் பேசுகிறது.Nostalgia ,Within attraction,Into deep blue போன்ற இசைகளைக் கேட்கும் பொழுது ஏற்படும் மகிழ்ச்சி அளப்பரியது.ஆம் தன்னையே உருக்கியல்லவா அந்த இசையை நமக்கு தருகிறார்.ஏதாவது ஒரு ஆல்பம் வெளியிட ஸ்டுடியோ உள் நுழைந்தால் ஒரு வாரம், ஒரு மாதம் அல்லது அதற்கும் மேல் கூட ஆகலாம்.சரியான நேரத்தில் உணவு இல்லாமல், உட்கார்ந்தால் சோர்வு அடைந்து விடுவேன் என்று நின்று கொண்டே சரியான இசை வரும் வரை இசைக்குறிப்புகள் எழுதிக்கொண்டேயிருப்பார் யானி.சரியான இசை வரும் வரையிலும் தூக்கம் கூட கிடையாதாம்.மூன்று மாதங்கள் ஆனாலும்கூட. மகத்தான நிலையை அடைய ஓர் கலைஞன் எந்த நிலைக்கும் செல்வான் என்பதற்கு உதாரணமாக அல்லவா இருக்கிறார்.ஸ்டுடியோவினுள் நுழையும் போது எழுபத்து நான்கு கிலோ இருக்கும் யானி வெளியே வரும் போது அறுபது அல்லது ஐம்பத்து ஐந்து கிலோ தான் இருப்பாராம்.இப்படித்தான் இப்புத்தகம் செல்கிறது.இந்த மகத்தான மனிதர்களை படித்தப் பின்னர் நமக்கும் உத்வேகம் அல்லவா ஏற்படுகிறது.எழுத்துத்துறை, சினிமா என்றில்லாமல் ஒசாமா பின்லேடன் முதல் மயில்சாமி அண்ணாதுரை வரையிலும் எல்லோரும் புத்தகத்தில் இடம்பெறுகின்றனர்.சில மனிதர்களை பற்றி நாம் அறிந்திருக்கும் பிம்பத்தை சற்றே மாற்றியமைக்கிறது.சுயமதிப்பீடு குறித்து பேசுவதோடு நின்று விடாது ரசனை குறித்தும் சிந்திக்க வைக்கிறது.இதுவரை புத்தகம் குறிப்பிட்ட மனிதர்களைப் பார்த்தோம்.எனது நேரடி அனுபவத்தின் அடிப்படையில் என்னை வியப்பில் ஆழ்த்திய என்னுடைய ஆசான் பாலகிருஷ்ணனும் இந்த பட்டியலில் இடம்பெற வேண்டும் என்று விழைக்கிறேன்.ஆம் 2019 ம்ஆண்டு ஆசிரியர் தகுதித் தேர்வில் (TRB) வேதியியல் பிரிவில் தமிழ்நாட்டிலேயே முதலிடம் பெற்றவர்.அவர் அந்த உன்னத நிலையை அடைய மேற்கொண்ட பயிற்சிகளையும் அதற்காக மென் பொழுதுபோக்குகளான தொலைக்காட்சி, சினிமா போன்றவற்றைக் கூடப் புறக்கணித்துவிட்டு,நான்கு ஆண்டுகள் இரவு பகல் பாராது முழு நேரமும் துறை சார்ந்தும் அதற்கு அப்பாலும் வாசித்ததன் விளைவாக தான் அது நிகழ்ந்திருக்கிறது. அதற்கு எப்பேர்ப்பட்ட உழைப்பு தேவையாயிருக்கும்.பாடத்தில் எத்தகைய தெளிவு , செய்நேர்த்தி உழைப்பும் இருந்திருக்கும்.
பள்ளித்தலைமையாசிரியரே இவர் என்னுடைய மாணவர்தான் என்று பெருமையோடும் கர்வத்தோடும் சொல்லி அவரை அறிமுகப்படுத்தியது இன்றும் என் நினைவில் நிற்கும் காட்சிகள்.அவர் எங்களை வழிநடத்திய அல்லது அணுகிய விதங்கள் குறித்து ஒரு தொடரே எழுதுமளவிற்கு இன்னப்பிற நெகிழ்ச்சியான நினைவுகளும் அனுபவங்களும் உள்ளன.இப்படியான மனிதர்கள் தானே நம்முடைய நாயகர்கள்.பல்வேறுதுறைசார்ந்த முப்பதுக்கும் மேற்பட்ட மனிதர்களை இக்கட்டுரை தொகுதிகள் பட்டியலிடுகிறது.இறுதியாக இப்புத்தகம் குறிப்பிடுவது மோசம், சுமார், பரவாயில்லை என்பது நமக்கு தேவை இல்லை. நம்முடைய செயல்களின் விளைவு உன்னதம் என்பது மட்டுமே.இப்புத்தகம் நம் வாழ்வை மாற்றியமைத்து புதிய அத்தியாயத்தைத் தொடங்க வழிவகை செய்யலாம்.
- கனிஷ்கர்.
கருத்துகள்
கருத்துரையிடுக