தமிழ்நாட்டின் முதல் காவல்துறை அருங்காட்சியகம் கோவையில்.
2019 டிசம்பர் 6 அன்று கல்லூரி களச்செயல்பாட்டின் போது எழுதிய இக்கட்டுரை தற்பொழுது மின்வடிவில்:
தமிழ்நாட்டின் முதல் காவல்துறை அருங்காட்சியகம்:
தமிழ்நாட்டின் முதல் காவல் அருங்காட்சியகம் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களால் திறந்துவைக்கப்பட்டு பொதுமக்கள் பார்வைக்காக செயல்பட்டு வருகிறது.
காவல் அருங்காட்சியகத்தில் காவல்துறையில் பயன்படுத்திய சில முக்கிய ஆவணங்கள், கருவிகள் மற்றும் குற்றவாளிகள் பயன்படுத்திய ஆயுதங்கள் எனப் பலவகைப்பட்ட பொருட்கள் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது.இந்திய சுதந்திரப் போராட்டத்தின்போது ஆங்கிலேயர் பயன்படுத்திய பீரங்கிகள், வெடிகுண்டுகள் அதேபோல் இந்திய இராணுவத்தின் ஏவுகணைகள் அருங்காட்சியகத்தில் இடம்பெற்றுள்ளது.தமிழ்நாட்டையே உலுக்கிய மிக முக்கிய குற்றவாளிகளான சந்தன கடத்தல் வீரப்பன், மலையூர் மம்பட்டியான் போன்றவர்கள் பயன்படுத்திய ஆயுதங்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.சில முக்கிய குற்ற சம்பவங்களான கோவை கள்ள நோட்டு வழக்கு, சான்சி கொலைகள், ஆட்டோ சங்கர் கொலை வழக்கு, மணியாச்சி கொலை வழக்கு போன்றவற்றின் குற்றப் பின்னணி தகவல்கள் இடம்பெற்றுள்ளது.பல புலனாய்வு கருவிகள், தட்டச்சு உபகரணங்கள்,உளவு கருவிகள்,கண்ணி வெடி மற்றும் வெடி மருந்து வாசனையை கண்டறியும் கருவி, புதைந்திருக்கும் உலோகத்தை கண்டுபிடிக்கும் கருவி, தேடுதல் கருவிகள், மின்னணு துடிப்புமானி, வெடிகுண்டு தடுப்புப் போர்வை, சிறிய ரக ஊடு கதிர் இயந்திரம் போன்றவை இடம்பெற்றுள்ளன.1900 முதல் தற்போது வரை பயன்படுத்திக் கொண்டிருக்கும் காவலர் உடைகள் மற்றும் தொப்பிகள் போன்றவை இடம்பெற்றிருந்தது நான்கைந்து தலைமுறை காலகட்டத்தையும் அதன் மாற்றத்தையும் உணர்த்துவதாய் இருந்தது. காவல்துறையில் உள்ள புகைப்படத்துறை குறித்தும் வெடிகுண்டுகள் கண்டுபிடித்தல் மற்றும் செயல்இழக்கச் செய்தல் துறைகளின் செயல்பாடுகளை விவரிக்கும் மாதிரிகளும் இடம்பெற்றிருந்தன.இந்தியாவில் மட்டுமின்றி உலகெங்கிலும் நடந்த போர்கள் மற்றும் புரட்சிகளில் பயன்படுத்தப்பட்ட ஆயுதங்கள் காட்சிக்காக வைக்கப்பட்டுள்ளன.கார்கில் போரில் பயன்படுத்தப்பட்ட பீரங்கி, சோவியத் யூனியனில் பயன்படுத்தப்பட்ட நீர்மூழ்கிக்கப்பல், வேலூர் புரட்சியில் பயன்படுத்தப்பட்ட குண்டுகள், பீரங்கிகள் இடம்பெற்றுள்ளன, மட்டுமின்றி இலங்கை தமிழ் போராளிகள் பயன்படுத்திய நீர்மூழ்கி கப்பலும் அருங்காட்சியகத்தில் இடம்பெற்றிருந்தது.
இந்த அருங்காட்சியகம் முன்னர் காவலர் விளையாட்டு சங்கமாக விளங்கியது.அச்சங்கம் 1918 ல் தொடங்கப்பட்டது.கிட்டத்தட்ட நூற்றாண்டை எட்டிய அக்கட்டிடம் பொழிவு இழக்கவே மீண்டும் 2016 ஆம் ஆண்டு புனரமைக்கப்பட்டு தற்பொழுது காவல்துறை அருங்காட்சியகமாக செயல்பட்டு வருகிறது.தற்பொழுதுள்ள இந்த அருங்காட்சியகத்தை 1910 களில் காவல் அதிகாரி ஹாமில்டன் 20000 ரூபாய்க்கு 86 சென்ட் நிலத்தை காவலர் விளையாட்டு சங்கத்திற்காகவும் உயரதிகாரிகள் தங்குவதற்கான அறைகள் கட்டுவதற்கும் வாங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.அதற்கான ஆவணமும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.
அருங்காட்சியகம் குறித்து காவல் அருங்காட்சியகத்தின் தலைமைக்காவல் அதிகாரி நிஷா கூறியதாவது, அருங்காட்சியகம் தொடங்கி ஒரு வருட காலமே என்றாலும் பொதுமக்கள் மத்தியிலும் மாணவர்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது என்றும், அருங்காட்சியகம் தொடங்கியது முதல் இன்றுவரை ஒரு மாதத்திற்கு சராசரியாக இருநூற்று ஐம்பதுக்கும் மேற்பட்ட பொதுமக்களும்,முந்நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்களும் வந்து செல்கின்றனர் என்று அவர் கூறினார்.
- கனிஷ்கர்.
உள்ளடக்கம்,உருவம் என்ற இரு அம்சங்களுக்கும் நாம் அளிக்கும் முக்கியத்துவமே படைப்பாக்கச் சிந்தனைக்கு இட்டுச் செல்லும் என்பதை தொடர்ந்து வலியுறுத்தி ஊக்கப்படுத்தும் எனது ஆசான்கள் வேதியியல் பேராசிரியர் திரு.பாலகிருஷ்ணன் அவர்களுக்கும் காட்சித் தொடர்பியல் துறை பேராசிரியர் திரு.கார்த்திக் அவர்களுக்கும் இக்கட்டுரையை நன்றியோடு சமர்ப்பிக்கிறேன்.
Credits 👏🏻👏🏻👏🏻
பதிலளிநீக்கு