கரைந்த நிழல்கள் நாவல் ஓர் பார்வை.

"சினிமா" என்ற வார்த்தை ஒலிக்கப் படும்போது மகிழ்வுறாத மனிதர்களைக் காண்பதென்பது மிக அரிதான ஒன்று.எல்லா விதமான கலை ஊடகங்களும் மனிதர்களின் வாழ்வியல் சார்ந்த அம்சங்களை பதிவு செய்தாலும், சினிமா ஒன்றே அதற்கான பிரத்யேகமான கலை வடிவம் என்பது போல் நவீன யுகத்தில் நிலைப்பெற்றுவிட்டது.கலையும் கலை சார்ந்த இடமாக "சினிமா தியேட்டர்கள்" மாறிவிட்டன. "டென்ட் கொட்டாய்" சினிமா,ஊரில் திரைகாட்டி பார்த்த சினிமா, சினிமா தியேட்டரில் கண்ட சினிமா என்று இருந்த சினிமாவின் பரிணாமம் இன்று அமேசான் பிரைம்,நெட் பிளிக்ஸ் என்று ஓ.டி.டி வழியே வலம் வர தொடங்கிவிட்டன.மேற்கண்டவற்றில் முதல் இரண்டு வகை சினிமாவை இன்றைய இளைஞர்களில் பெரும்பாலானோர் கண்டிருக்க வாய்ப்பில்லை என்றே தோன்றுகிறது.இவ்வாறு சினிமாவின் தொழில்நுட்பம் வியத்தகு மாற்றங்களைக் கொண்டிருக்கிறது.இருப்பினும் திரைக்குப் பின்னால் உழைக்கக் கூடிய தொழிலாளர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களின் வாழ்வியல் பதிவுகள் எங்கும் காணக்கிடைக்காத ஒன்றாகவே உள்ளது. "கரைந்த நிழல்கள்" எனும் நாவல் படிக்கும் போது ஓர் சினிமா எத்தனை எத்தனை மனிதர்களின் உழைப்பைத் கடத்தி உருவாக்கப்பட்டிருக்கிறது என்ற நிஜத்தை கதை வடிவில் சொல்கிறது.சந்திரா கிரியேஷன்ஸ் புரொடக்சன் மானேஜர் நடராஜன் அவுட்டோர் ஷுட்டிங்கிற்காக இயக்குநர்,துணை இயக்குநர்கள், சவுண்ட் டெக்னீசியன்ஸ், ஒளிப்பதிவாளர் அவரது அஸிஸ்டென்ட், லைட் மேன், நடனப் பெண்கள் என அனைவரையும் ஒருங்கிணைத்து அவுட்டோர்  ஷுட்டிங் எடுக்க செல்வதாக நாவல் ஆரம்பிக்கும். அவுட்டோர் ஷுட்டிங் முடிந்து ஸ்டுடியோ ஷுட்டிங் தொடங்கும் போது கதாநாயகி ஜயசந்திரிகா படப்பிடிப்புக்கு வராமல் ஏமாற்றிவிடுவாள்.சந்திரா கிரியேஷன் உரிமையாளரும் புரொடியூசருமான ரெட்டியார் ஏற்கனவே திவால் ஆகி போயிருப்பார்.இப்படம் வெளிவந்தால் தான் ஓரளவு பழைய நிலைக்கு மீண்டு வரும் வாய்ப்பு இருக்கும்.அவளை படப்பிடிப்புக்கு அழைத்து வர அவரே செல்வார்.ஆனால் அவள் வரும் வழியில் மயங்கி விடுவாள்.அன்றிலிருந்து அனைவருக்கும் வாழ்க்கையே தலைகீழாக மாறிவிடும்.படத்தின் இயக்குநர் ஜகந்நாத் ராவ் பங்களா வைத்திருப்பவர்.அதிகமாக வெளிநாட்டு பயணம் மேற்கொள்பவர்.வாழ்வில் எந்த மாறுதலும் இன்றி தன் நிலையை அவரால் தக்கவைத்துக்கொள்ள முடிந்தது.ஆனால் அவர் அசிஸ்டென்ட் ராஜ்கோபால் நான்கு மாதத்திற்கு வேலையே இல்லாமல் தவிக்கிறான்.அவன் அண்ணன் இவன் துணியை குச்சியைக் கொண்டு வெளியே வீசுகிறான்.அவன் அண்ணி மூன்று வேளையும் பழைய சோறே ஊற்றுகிறாள்.சைக்கிள் டயருக்கு காற்று அடிக்கக்கூட காசு இல்லாமல் அலைந்து திரிகிறான்.பன்னிரண்டு வருடம் சினிமாவில் உதவி இயக்குனராக இருந்தவன்.வேலைக்காக எத்தனை எத்தனையோ ஸ்டுடியோ ஏறி இறங்குகிறான்.டீயும் புகையுமே அவன் நம்பிக்கையை தளரவிடாமல் செய்தன.இறுதியில் நடிகை ஜயசந்திரிகாவை திருமணம் செய்துகொள்வான்.ரெட்டியார் படப்பிடிப்பு தொடர முடியாத சூழ்நிலையில் ஊரை விட்டு போய் ஒரு வருடத்திற்கு மேல் ஆகியிருந்தது.அப்போது விநாயக ஸ்டுடியோ முதலாளி ராம ஐயங்கார் ஓர் தியேட்டர்,ஒரு ஸ்டேஜ் கட்டுவதாக முடிவு செய்திருப்பார்.விநாயகா ஸ்டுடியோ புரோகிராம் ரூம்களில் ஒன்றைத்தான் ரெட்டியார் திரைப்படத்திற்கு பயன்படுத்தி வந்தனர்.ஆனால் அவர்கள் திரும்ப வராததால் ரூம் ஒரு வருடத்திற்கு மேல் பயன்படுத்தப்படாமல் பூட்டி வைக்கப்பட்டிருக்கும்.அதை திறந்து பொருட்களை அகற்றிவிட்டு அதற்குள் தான் மூவாயிரம் சிமெண்ட் மூட்டைகளை அடுக்கி வைப்பார்கள்.அங்கு சந்திரா கிரியேஷன்ஸ் கடைசியாக படப்பிடிப்பு நடத்திய திரைப்படத்தின் எத்தனையாவது ஷாட், டேக் , தேதி எல்லாம் கிளாப் போர்டில் அழியாமல் அப்படியே இருக்கும்.மைப்புட்டியில் கருப்பு மை உலர்ந்து உட்புறம் வண்டல் போல் படிந்திருக்கும், ஸ்கிரிப்ட் தாள்கள்,Continuity தாள்கள் அனைத்தும் கரையான்கள் அரித்து அரைப்படிக்குள் அடக்கி வைக்கக்கூடிய காகித தூசியாய் போயிருக்கும்.வடமாநிலங்களில் தமிழ் படங்களை வெளியிட தடைக்கோரிய போராட்டம்,தமிழ்நாட்டில் நடைப்பெற்ற இந்தி எதிர்ப்புப் போராட்டம் என்று அப்போதைய (1960) காலக்கட்ட சமூக காரணிகள் விவாதிக்கப்பட்டுள்ளது.இறுதியாக புரொடக்சன் மேனேஜர் நடராஜன் கால்கள் வீங்கி கண் பார்வை இழந்து பிச்சையெடுத்துக் கொண்டிருப்பார்.ஒரு புரொடக்சன் கம்பெனியின் வீழ்ச்சி தொழிலாளர்களின் வாழ்வில் எத்தகு மாற்றத்தை ஏற்படுத்தியது என்பதே நாவல் நமக்கு சொல்வது.இலக்கியத்திற்கே உரிய உத்திகளை சிறப்புற கையாண்டிருக்கிறார் அசோகமித்திரன்.நாவலில் கிட்டத்தட்ட நூறு கதாப்பாத்திரங்களாவது இடம் பெற்றிருக்கும்.எந்த கதாப்பாத்திரமும் முதன்மையான கதாபாத்திரமாக கையாளப்பட்டிருக்காது இருப்பினும் சுவாரஸ்யம் குன்றவில்லை.நாவலில் பத்து இயல்கள் (Chapters) உள்ளது.சித்தரிப்புகள் ஒவ்வொன்றும் திரும்பத் திரும்பப் படிக்க தூண்டுவதாய் உள்ளன.சினிமா குறித்த தவறான பிம்பம் அனைவரிடத்திலும் ஏற்பட்டிருக்கும் நிலையில் கள எதார்த்தத்தைச் சொல்லும் நாவலாக "கரைந்த நிழல்கள்" இருக்கும்.
  கட் கட் கட்.
        - கனிஷ்கர்.
              

கருத்துகள்

  1. Nice explanation. Yes !! When we watch the movie, we never see the efforts by lot of people. At the most, We will celebrate the director. But there are people who crave for recognition and end their life doing small works related to cinema. The plots seems to be interesting. Thanks for a good book suggestion.👏👏👏

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

பிரபலமான இடுகைகள்