கர்ணன் திரைப்படம் ஓர் கண்ணோட்டம்.

இது விமரிசகனின் பதிவு அல்ல,பார்வையாளனின் பதிவு.கர்ணன் திரைப்படம் வெளியாகி ஒன்றரை மாதம் கடந்துவிட்டாலும் இன்றுதான் படம் பார்த்தேன்.பரியேறும் பெருமாள் இத்திரைப்படத்தையும் சிறப்புற அளித்துள்ளார்.(இங்கு பரியேறும் பெருமாள் என்பது மாரி செல்வராஜைக் குறிக்கிறது).தான் பேச நினைத்த நுண் அரசியலை சரியான விதத்தில் பேசியுள்ளார்.இடையிடையே காதல் காட்சிகளுக்கு அளித்த முக்கியதுவத்தைச் சற்றுக் குறைத்திருக்கலாம்.கலை இயக்குநர்,இசை அமைப்பாளர், ஒளிப்பதிவாளர் என்று அவரவர்களுக்கான பணியைச் சிறப்புறச் செய்துள்ளனர்.கதையின் வேகம் மற்றும்  காட்சி அமைப்பில் சற்றுக் கவனம் செலுத்தியிருக்கலாம்.இப்படம் ஓர் உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டது.தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் வட்டத்தில் அமைந்துள்ள கொடியன்குளம் பகுதியில் நடந்த வன்முறையே கதைக்கரு.இவ்வன்முறை இரு வேறுவித அடிப்படையில் நடத்தப்பட்டது. ஒன்று சாதிய வன்முறை, மற்றொன்று எளிய மக்களின் பொருளாதார,கல்வி உரிமைகளைத் தடுக்க அதிகார கட்டமைப்பு ஏற்படுத்திய சூழ்ச்சி.இதன் பின்னணி நபர்கள் குறித்து எழுதினால் இது  அரசியல் கட்டுரையாக மாற்றம் பெறும் என்பதால் அதை நான் தவிர்த்துவிடுவதே நலம். இச்சம்பவத்திற்கான முழு முதற் காரணம் அரசியல்வாதிகள். அவர்களின் கட்டளையின்பேரில் சம்பவத்தை வழிநடத்தியவர்கள் அவர்களின் அடியாளான காவல்துறையினர் (காவல்துறை அரசியல்வாதிகளின் அடியாள் என்று சொல்வதை விட பணம் இருப்பவர்களின் அடியாள் என்று சொல்வதே பொருத்தமாக இருக்கும்). உலகில் மாபெரும் இன அழிவுக்கு உள்ளாக்கப்பட்டும் அடிப்படை உரிமைகள் கூட கிடைக்கப் பெறாமல் வஞ்சிக்கப்பட்டனர் யூதர்கள்.யூதர்களைப் பற்றி (Jews) சில புரிதல் இருந்தால் தான் Schlinders List என்ற திரைப்படத்தை புரிந்துகொள்ள முடியும்.ஏனெனில் 20ம் நூற்றாண்டின் மனிதனால் மனிதன் மீது நிகழ்த்தப்பட்ட மாபெரும் வன்முறைகள் குறித்து அத்திரைப்படம் பேசியிருக்கும் அவற்றில் பாதிக்கப்பட்ட மக்களே யூதர்கள்.அது போல் இக்கலவரம் ஏன் நடத்தப்பட்டது?அதன் பின்னணி அரசியல் என்ன? என்பதைத் தெரிந்து கொண்டால் அத்திரைப்படம் பேசும் நுண் அரசியலையும் நாம் உணர்ந்துகொள்ள முடியும்.கர்ணன் திரைப்படத்தில் காட்சிகள் தத்ரூபமாக படமாக்கப்பட்டிருப்பதைப் பார்க்கும் போது பரியேறும் பெருமாள் சம்பவங்கள் குறித்து நேரடி அனுபவம் பெற்றிருப்பார் என்றே தோன்றிற்று.இத்திரைப்படத்தில் ஒரு வசனம் இடம்பெற்றிருக்கும் "இவனுக பஸ்ஸ வேணாம்னு சொல்ற கோஷ்டி இல்ல பஸ்ஸூ வேணும்ணு சொல்ற கோஷ்டி". என்று இதில் பேசப்பட்ட நிகழ்வு விருதுநகர் மாவட்டத்தில் நிகழ்ந்தது,தமிழக அரசு மாவட்டங்களுக்கும் போக்குவரத்து கழகத்திற்கும் சுதந்திரப் போராட்ட வீரர்களின் பெயர் சூட்டினர்.அவ்வகையில், விருதுநகர் போக்குவரத்து கழகத்திற்கு வீரன் சுந்தரலிங்கம் பெயரைச் சூட்டினர்.ஆனால் அவர் தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சார்ந்தவர் என்பதால் ஆதிக்க சாதியினர் சிலர் பேருந்தில் பயணிக்க மாட்டோம் என்று ஆரம்ப காலங்களில் எதிர்ப்பு தெரிவித்தனர், நாளடைவில் பேருந்துகளை மறிப்பது, கற்கள் வீசி தாக்குதல் நடத்தியது என்பதோடு நின்றுவிடாமல் சிலவிடங்களில் பேருந்துகளையே தீயிட்டுக் கொளுத்தினார்.அந்த வசனம் பேசியிருக்கும் அரசியல் இது.எனவே இத்திரைப்படம் இது போன்ற விவாதத்தையும் விளைவுகளையும் ஏற்படுத்தக்கூடியது.அதனையே அக்கலைப் படைப்பின் வெற்றி எனக் கொள்ளலாம்.இறுதி வரிகளில் குறிப்பிட வேண்டுமெனில் திருப்பியும் அடிப்போம் அடிக்கத் தெரியும் என்று நிரூபணம் செய்திருக்கிறார் பரியேறும் பெருமாள் BA BL மேல ஒரு கோடு.
                      - கனிஷ்கர்.

கருத்துகள்

கருத்துரையிடுக

பிரபலமான இடுகைகள்