வழிப்பறி
நான் வழக்கம் போல் கம்பெனியில் இருந்தேன், அடிப்படையில் நான் கல்லூரி மாணவன் தான் என்றாலும் கல்லூரி நேரம் தவிர்த்து பெரும்பாலும் பனியன் கம்பெனிதான்.வேலை இல்லாத நேரங்களில் புத்தகம் வாசித்துக்கொண்டோ யூடியூப் ல் வீடியோ பார்த்துக்கொண்டோ இணையத்தில் எதையாவது தேடிக்கொண்டிருப்பதுதான் எனக்கு வழக்கம். அவ்வகையில் தமிழில் நூறு சிறந்த நாவல்களைத் தேடிக்கொண்டிருந்தேன். எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணனும் ஜெயமோகனும் நூறு நாவல்களை பட்டியலிட்டு இருந்தனர். ஜெயமோகன் சற்றுக் குழப்பியிருந்தார். எஸ்.ராமகிருஷ்ணன் சற்று கூடுதல் தெளிவோடு பட்டியலிட்டு இருந்தார்.அந்நேரத்தில் ஒரு பைக் பயங்கர சத்தத்துடன் சென்று என் கவனத்தை திசை திருப்ப,உடனே ஒருவர் " என்னோட மொபைல்ல புடுங்கிட்டு போறானுங்க புடிங்க புடிங்க " என்று கத்திக்கொண்டே ஓடினார். நான் வெளியே வந்துப் பார்த்த போது ஓட்டத்தின் வேகத்தை அதிகரிக்க முயன்றார்.ஆனால் ஆர்.ஒன்.பைவ் ன் வேகத்துக்கு அவரால் ஈடுகொடுக்க முடியவில்லை.அவர் தெருவின் எல்லைக்கு செல்வதற்குள் வழிப்பறியை மேற்கொண்டவர்கள் ஒரு கிலோமீட்டராவது சென்றிருக்கக் கூடும் என்றே என்னால் யூகிக்க முடிந்தது. அந்த ஆர்.ஒன்.பைவ் இல் சென்ற நபர்கள் போன வாரம்தான் பக்கத்துத்தெருவில் வழிப்பறி மேற்கொண்டவர்கள் என்பது அக்கம்பக்கத்தினர் பேசிக் கொண்டிருக்கையில் தெரிந்தது. பத்து நிமிடங்கள் அவ்விடத்தில் அசாதாரண சூழலே நிலவியது.பிறகு பதற்றத்துடன் கம்பெனிக்குள் சென்று அமர்ந்தபோதுதான் நான் முதலாமாண்டு கல்லூரி செல்லும்போது தொடர்வண்டியில் நான் கண்ட காட்சி நினைவுக்கு வந்தது.அதுவும் ஒரு வழிப்பறி தான் ஆனால் தவறு வழிப்பறிக்கு ஆளானவனர் மீது.ஏனெனில் அவர் ரயில் படிக்கட்டில் அமர்ந்து பயணம் செய்ததோடு மட்டுமன்றி மொபைல் ஐ உபயோகித்துக்கொண்டிருந்தார்.அவ்விடத்தில் தண்டவாள பராமரிப்பு மேற்கொண்ட காரணத்தால் ரயில் சற்று மெதுவாகவே சென்றது.அதைப் பயன்படுத்திக் கொண்டு மொபைல் ஐ பிடுங்கி விட்டனர்.ஏற்கனவே அந்த இடத்தில் என் நண்பனின் Mobile பறிக்கப்பட்ட செய்தியைக் கேள்விப்பட்டேன். ஆனால் அன்றோ அதே இடத்தில் மீண்டும் வழிப்பறி. ரயில் கோயம்புத்தூர் சந்திப்பு வரும் வரை பறிக்கொடுத்தவரின் பதற்றநிலை சற்றும் குறையவில்லை. அவரும் கல்லூரி மாணவர்தான்.பிறகு அவரை பார்க்க நேரும் போதெல்லாம் அக்காட்சிகளே நினைவுக்கு வரும்.இச்சம்பவம் முன்பதிவு செய்யப்படாத பெட்டியில் நடந்தது, அவற்றில் 70 இருக்கைகள்தான் இருக்கும். அதிலும் அன்று தோராயமாக 50 இருக்கைகள் கூட நிரம்பியிருக்கவில்லை. ஆனாலும் அவர் படிக்கட்டில் பயணம் செய்தது தவறுதான் என்ற குற்றவுணர்ச்சியே அவர் ரயில்வே காவல்துறையை அணுகாததற்குக் காரணம். இவ்விரு சம்பவங்களிலும் வழிப்பறியில் ஈடுபட்டவர்கள் 18 முதல் 21 வயதிற்குள் இருப்பவர்கள்.முந்தைய காலங்களில் இது போன்ற சம்பவங்களில் ஈடுபடுவோரை பிடித்து விசாரிக்கும் போது வறுமை மட்டுமே காரணமாக இருக்கும்.ஆனால் இப்போதோ ஓர் lifestyleக்காகவோ அல்லது lifestyle ஐ தக்கவைத்துக் கொள்ளவோதான் வழிப்பறிகள் நிகழ்கின்றன. அந்த மொபைல்களை குறைந்த விலைக்கு விற்று அவர்கள் மது அருந்தலாம், கஞ்சா புகைக்கலாம், தன் காதலியுடன் வெளியே செல்லலாம், சிவப்பு விளக்கு பகுதிகளுக்குச் செல்லலாம் அல்லது தான் வேலைக்குச் சென்று சம்பாதித்தது என்று வீட்டுச் செலவிற்கும் அளிக்கலாம், பள்ளி அல்லது கல்லூரி கட்டணம் செலுத்தப் பயன்படுத்தலாம்.ஆனால் இவற்றில் ஏதேனும் ஒன்று நிகழும் என்பதில் மாற்றுக் கருத்தில்லை.இச்சம்பவம் நம்முடைய இளைஞர் சமுதாயம் எந்நிலை நோக்கி சென்றுகொண்டிருக்கிறது என்பதையே மெய்ப்பிக்கிறது. நான் கம்பெனியிலிருந்து எதார்த்தமாக சாலையைப் பார்த்தப்பொழுது மொபலை பறிகொடுத்தவர் திரும்பி வந்துகொண்டிருந்தார் உடல் முழுக்க வியர்வைகளோடு. அவரைப் பார்த்தவுடன் வெளியே சென்றேன், அப்போது அவர் சற்று முன்னே சென்று வழிப்பறியின் போது தவறவிட்ட கண் கண்ணாடியை எடுத்தப்போது frame மட்டுமே மிஞ்சியிருந்தது அதுவும் சற்று வளைந்தும் நெளிந்தும் உபயோகமற்றதாய் இருந்தது.அப்போது அதைக் கையில் எடுத்துக்கொண்டு நடக்க ஆரம்பித்தார், எங்கள் கம்பெனி முன் வரும்போது என் அப்பா வழிப்பறி குறித்து விசாரித்து, உங்க வீடு எங்க இருக்கு? எனக் கேட்டார், அவர் அதற்கு கணக்கம்பாளையம் என்று பதிலளித்தார். வழிப்பறி நிகழ்ந்த இடத்திற்கும் அவரின் முகவரிக்கும் 10 கிலோமீட்டர் தூரம் ஆவது இருக்கும். எதுவும் பேசாமல் அங்கிருந்து விடைப்பெற்று பஸ் ஏற நடக்க ஆரம்பித்தார். அவர் நடக்கும் போது பறிபோன மொபலையும் உடைந்த கண் கண்ணாடியையும் எப்படியாவது மீண்டும் வாங்கி விட வேண்டும் என்ற எண்ணவோட்டம் தான் அவரினுள் ஏற்பட்டிருக்கக்கூடும் என்பது மட்டும் நன்றாக தெரிந்தது.
என் இருத்தலின் மாற்றம் ஏற்படுத்திய பிரக்ஞையில் நான் எழுதியது.
- கனிஷ்கர்.
கருத்துகள்
கருத்துரையிடுக