மானுட வாசிப்பு - தொ.ப நேர்காணல்கள் புத்தகமாக.

எனக்குள் நீண்ட நாட்களாகவே இருந்த கேள்விகள் என்பது வரலாறு சார்ந்த, பண்பாடு சார்ந்த, மனிதகுல வாழ்வியல் சார்ந்தவைகளாக இருந்தன. அக்கேள்விக்களுக்கான பதில்களை எவ்வாறு கண்டறிய வேண்டும் என்று எண்ணிக்கொண்டிருக்கையில் நான் "மானுட வாசிப்பு " என்ற புத்தகத்தை வாங்கினேன், வாங்கியவுடன் அதற்கான பதில்கள் எனக்கு கிடைக்கவில்லை, வாசித்தப் பின்னர் தான் கிடைத்தது. இது ஓர் கேள்வி பதில் வடிவில் அமைந்த புத்தகம். தமிழ்நாட்டின் பண்பாட்டு எழுத்தாளரும்,தமிழறிருமான தொ.பரமசிவன் அவர்கள் வரலாறு மற்றும் மானுடவியல் சார்ந்த பல்வேறு கேள்விகளுக்கு அளித்த பதில்களே இப்புத்தகம். கேள்விகளைக் கேட்டும் புத்தகத்தைத் தொகுத்தும் இருக்கின்றனர் தயாளன் மற்றும் ஏ.சண்முகனாந்தம்.நாம் உண்மைகளை அறிந்து கொள்ளவே வரலாற்றை வாசிக்க முற்படுகிறோம் அவ்வாறு இருக்க நம் பள்ளிக்கூடங்களில் பாடத்திட்டப் புத்தகங்களில் வரலாறு என்பது சரியான முறையில் பதிவு செய்யப்படுவதில்லை.அங்கு வரலாறு என்பது மன்னர்களைப் பற்றி மட்டுமே அல்லது இதிகாசங்கள் பற்றியோ வேதங்களைப் பற்றியோ இருக்கலாம். அதனை விடுத்து பரந்துபட்ட அளவில் வரலாற்றை குறிப்பிடுவது இல்லை.இச்செய்திகள் அனைத்தும் இந்நூலைப் படித்த பின்னரே நான் அறிந்துகொண்டவை.இந்நூல் விவாதித்த வரலாறு என்பது தர்க்க ரீதியிலான தத்துவ ரீதியிலான அடிப்படையைக் கொண்டது.அவ்வாறாக நான் அறிந்த
அறிய முற்பட்ட உண்மைகள் பின்வருவன, 
அம்பேத்கரை சிந்தனையாளர் என்று ஏற்றுக்கொள்ளும் இச்சமூகம் பெரியாரை ஏன் நிராகரிக்கிறது என்றும் , ஜாதி என்ற சொல்லே தமிழ் மொழியில் இல்லை என்பதையும், தமிழுக்கு திருக்குறள் என்ற மாபெரும் கொடையினை அளித்த சமண மதம் தமிழ்நாட்டில் நிலைக்காமல் போனது குறித்தும், பண்பாடு குறித்தும், (பண்பாடு என்பது பண்படுத்தப்பட்ட நடத்தைமுறை). மதுரை தான் தமிழர்களுடைய பண்பாட்டுத் தலைநகரம் என்றும், இந்தியாவிலேயே அதிக கல்வெட்டுக்கள் கொண்ட மாநிலம் தமிழகம் தான் என்றும் (ஏறத்தாழ 1 லட்சம் கல்வெட்டுக்கள்), ஜல்லிக்கட்டிற்கும் மஞ்சுவிரட்டிற்கும் இடையே உள்ள வேறுபாட்டையும், வீட்டின் வாசலில் போடப்படும் கோலம் குறித்தும் அதற்கான காரணம் குறித்தும், மாட்டுக்கறி அரசியல் குறித்தும், புழங்கு பொருள் பண்பாடு குறித்தும், உணவுப்பொருட்களில் பயன்படுத்தப்படும்  உப்பையும் அதன் பின்னணி வரலாறும் , சித்தர்கள் குறித்தும் அவர்களின் வாழ்க்கை முறை, நிலைப்பாடு குறித்தும், குருகுல கல்வி குறித்தும், பள்ளிக்கூடத்திற்கு ஏன் பள்ளிக்கூடம் என்ற பெயர்  வந்தது என்பது குறித்தும், சோறும் நீரும் விற்பனைக்கல்ல என்ற தமிழ் மரபை பன்னாட்டு நிறுவனங்கள் MNC s எவ்வாறு தகர்த்தன என்பதையும், 5001 அடிகளைக் கொண்ட சிலப்பதிகாரத்தில் 5000 தாவரப் பெயர்கள் உள்ளது என்பதையும், சாதி என்பது "பாதுகாப்பற்றவனின் புகலிடம்" என நிறுவியும், வேதம் என்பது மிகப்பெரிய அதிகார கட்டமைப்பு என்பதையும், தமிழைக் காட்டுமிராண்டி மொழி என்று சொன்ன பெரியார் தான் தமிழுக்கு எழுத்து சீர்திருத்தம் அளித்தவர் என்பதையும், பெரியார் வாழ்ந்த காலத்தில் அவரை ஏற்றுக்கொள்ளாத கம்யூனிஸ்ட்கள் இன்று வாக்கு வங்கி காரணமாக அவர் குறித்து பேசுகின்றனர் என்று இடதுசாரிகள் குறித்தும், அதிகாரத்தை நோக்கிய நகர்வு என்பது மானுட விடுதலைக்கு எதிரானது என்பதையும், தமிழ் தேசிய உருவாக்கம் குறித்தும், களப்பிரர்கள்  காலம் தமிழகத்தின் இருண்ட காலம் அல்ல என்பதையும், இசைக்கருவிகள் செய்யும் தொழிலைக் கொண்ட பாணர்கள் குறித்தும், தமிழகக் கோயில்களில் இருந்த தேவதாசி முறை ( temple prostitution) குறித்தும், தமிழர்களின் திணைக் கோட்பாடு குறித்தும் ( திணைக்கோட்பாடு என்பது நிலமும் காலமும் சார்ந்தது), பாரதியாரின் கவிதைகளை விடவும் உரைநடையே சிறந்தது என்பதையும், பாண்டியர்களே தமிழ்நாட்டின் பழைமையான குடி என்பதையும், விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரன் குறித்தும் இப்புத்தகம் நமக்கு அளிக்கிறது.அதுமட்டுமின்றி ஐம்பதுக்கும் மேற்பட்ட நூல்களை இப்புத்தகம் மூலம் அறிமுகம் செய்கிறார் தொ. பரமசிவம். வரலாற்று வாசிப்பு
 என்பது வரலாற்றை அறிந்து கொள்ளும் நோக்கம் மட்டுமல்ல, வரலாறு குறித்து நமக்குள் இருக்கும் தவறான புரிதலை மாற்றியமைக்கவுமே. இப்புத்தகத்தின் சாரம்சம் என்னவெனில் "ஒவ்வொரு மனிதனும் வாசிக்கப்பட வேண்டிய புத்தகம்" 
புத்தகம்: மானுட வாசிப்பு - தொ.பரமசிவன் நேர்காணல்கள்.
இதை வாசிக்கும் நண்பர்கள் புத்தக கண்காட்சிக்கு செல்ல முற்படுமாயின் கட்டாயம் வாங்கிவந்து படிக்கலாம் இப்புத்தகத்தை..
    
                                          - கனிஷ்கர்.

கருத்துகள்

கருத்துரையிடுக

பிரபலமான இடுகைகள்