ஒரு புளிய மரத்தின் கதை ஓர் அனுபவம்.

ஒரு புளிய மரத்தின் கதை நாவல் எனக்கு எப்படி அறிமுகமெனில், நான் எந்த ஓர் திரைப்படத்தை பார்க்க முற்படுகின்றேனோ அல்லது எந்த ஒரு நூலினை பயில வேண்டும் என்று எண்ணுகிறேனோ அத்தலைப்பினை முன்வைத்து சிறந்த திரைப்படத்தை பார்ப்பதோ  அல்லது புத்தகத்தைப் படிப்பது வழக்கம். அவ்வாறான சிறந்த நூல்களில் மிகச் சிறந்த நூலாக இந்நாவலை கருதுகிறேன்.கதையில் கதாப்பாத்திரங்கள் மிகச்சிறப்புற கையாளப்பட்டிருக்கிறது.ஏனெனில், ஓர் கதாபாத்திரத்தை உதாரணமாக வைத்துக் கொள்ளலாம். அந்தக் கதாபாத்திரத்தின் பெயர் தமோதர ஆசான். அவர் போன்ற மனிதர்கள் ஒவ்வொரு ஊரிலும் உள்ளனர், வெவ்வேறு பெயரினைக் கொண்டு.இந்நாவலை படித்து முடிக்கையில் இவ்வுலகில் உள்ள அனைத்து மனித உயிர்களும் சுயநலவாதி என்றே தோன்றிற்று. எந்த மனிதனுக்கும் பொதுநலம் முக்கியமல்ல, விதிவிலக்கு புளிய மரம் ஒன்றே. அப்படி அது நிற்பதைப் பொறுத்துக் கொள்ள முடியாத மனிதனின் வன்மம் புளியமரத்தைக் கொலை செய்து விட்டது. புளிய 
மரத்துக்கு இயற்கையாக மரணிக்க வாய்க்கவில்லை. இப்பெருங்கதை மரங்களையும், செடிகளையும்,கொடிகளையும் மனித உயிராக பாவித்தது. வஞ்சகம் இல்லாத மனித உயிராக.இக்கதை 1960 களில் வெளிவந்தது இருப்பினும்,இன்றைய சூழலுக்கு ஏற்புடையவையாகவே உள்ளது. இதில் அனைத்துத்தரப்பு கதாப்பாத்திரங்கள் அமைத்து எழுதியிருந்தது அப்போதிருந்த வாழ்க்கை படிநிலையை அறிந்து கொள்ள முடிந்தது. அவ்வாறு அறிந்து கொண்டதில் என்னுடைய புரிதல் என்னவெனில் காலமும் விலைவாசியும் உயர்ந்திருக்கிறது என்பதே, மனித வாழ்க்கைத் தரம் உயரவேயில்லை, மனித வாழ்க்கை தரம் என்பது இங்கு எளிய மக்களை குறிக்கிறது. எளிய மக்கள் வாழ்க்கைத்தரம் உயர வழிவகை செய்யாமல் ஓர்நாடு விண்வெளிக்கு இராக்கெட் மட்டும்  அனுப்பி தன்னை வல்லரசாக அறிவித்துக் கொள்வதில் என்ன பெருமை இருந்துவிட முடியும். இந்நாவலில் வரும் முதலாளிகள் தன் சுயலாபத்திற்காக தொழிலாளிகளை எவ்வாறு பயன்படுத்திக் கொள்கிறார்கள் என்று நன்கு விளக்கி இருந்தார் சுந்தர ராமசாமி. இறுதியாக முதலாளிகளின் பேராசை கூலி ஐயப்பனையும் புளியமரத்தையும் மரணிக்க வைத்துவிட்டது.
                         ஏப்ரல் மாத இனிமையான மாலை வேளையில் பேருந்தில் பயணம் செய்து கொண்டிருக்கையில் எழுதியது.எழுதி முடிக்கும் வரையிலும் பேருந்து சென்றுகொண்டேதான் இருந்தது.
                       கனிஷ்கர்

கருத்துகள்

கருத்துரையிடுக

பிரபலமான இடுகைகள்